1எம்டிபி விவகாரம்: அம்னோ, மஇகா தொகுதித் தலைவர்களை போலீஸ் விசாரிக்கிறது

 

அம்னோ மற்றும் மஇகா தொகுதித் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதிகள் குறித்து போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த நிதி 1எம்டிபியிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று, அவர்களில் 10 பேர் பணச் சலவை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணைக்காக கோலாலம்பூருக்கு அழைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

அந்த விசாரணை இன்று காலையிலும் தொடர்ந்து நடந்ததாகவும் மேலும் பலர் விசாரிக்கப்படுவதாகவும் தெரிகிறது.

இதுவரையில், விசாரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30-ஐ தாண்டியுள்ளது. மேலும் பலர் விசாரிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை விசாரணைக்கு வர ஆணையிடும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று மலேசியாகினியிடம் கூறப்பட்டது.

தொகுதிகளுக்கு அளிக்கப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதை நிர்ணயிப்பதோடு தலைவர்களின் சொத்துகள் மீதும் போலீஸ் கவனம் செலுத்துகிறது. எனினும், விசாரிக்கப்படும் தொகுதிகளின் மற்றும் தலைவர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, அம்னோ வட்டாரத் தகவல்படி, அம்னோவின் 191 தொகுதிகளில் குறைந்தபட்சம் பாதி தொகுதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கு இல்லை..

தொகுதிகளின் நிதிகள் குறித்து அதிகாரிகள் சந்தேகப்பட்டால், தொகுதிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படலாம். இது அம்னோவின் நடவடிக்கைகளுக்கு நல்லதல்ல என்றும் கூறப்பட்டது.