முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் பெவிலியன் ரெசிடெண்ட் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தொகை போலீஸ் அறிவித்ததைவிட கூடுதலானது என்பதை நஜிப் நிருபிக்கத் தவறி விட்டார் என்று வாணிகக் குற்ற விசாரணை இலாகாவின் தலைவர் அமர் சிங் கூறுகிறார்.
கடந்த மே மாதத்தில், அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட உண்மையான தொகை ரிம160 மில்லியன் என்றும், போலீஸ் கூறியது போல் ரிம114 மில்லியன் அல்ல என்றும் கூறும் போலீஸ் புகார் ஒன்றை நஜிப் செய்துள்ளார் என்று அமர் கூறினார்.
போலீஸ் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது அல்லது குறைந்தபட்சம் அந்தத் தொகையை அவர் எப்படி கணித்தார் என்று விளக்கம் அளிக்க அவரால் இயலவில்லை என்று மினாரா 238, ஜாலான் துன் ரசாக்கில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
1எம்டிபி விவகாரம் சம்பந்தமாக அதிரடி சோதணை நடத்தப்பட்ட அந்த வீட்டில் போலீஸ் கைப்பற்றிய தொகை குறித்து போலீஸ் அறிக்கை வெளியிட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் நஜிப் போலீஸ் புகார் செய்தார் என்று அமர் மேலும் கூறினார்.
அதற்கு முன்னதாக, அங்கு எவ்வளவு பணம் இருந்தது என்பதைக் கூற நஜிப் முன்வரவில்லை என்றாரவர்.
ரிம43.3 மில்லியன் இழப்பை போலீஸாரிடமிருந்து பெற அம்னோ கடந்த வாரம் ஒரு வழக்கை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.