ஊழல் குற்றவாளிகளுக்குக் ‘கசையடி’ தண்டனை வழங்க வேண்டுமென, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த மே மாதம், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகு, அவ்வாணையத்திற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட்ட சுக்ரி, இந்நடவடிக்கை கையூட்டு பெற விரும்புவோருக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறினார்.
“நான் கையூட்டை மிகவும் வெறுக்கிறேன். ஊழலில் ஈடுபடுபவர்கள் எனக்கு ஒவ்வாதவர்கள்.
“ஒருவேளை, பிரதமர் மகாதிர் மரண தண்டனையைப் பரிந்துரைத்தால், நான் அதற்கு ஆதரவு தருவேன்.
“சீனாவில், ஊழலுக்குத் தண்டனை மரணம்தான். ஆனால், மலேசியாவில் அப்படி இல்லை. தற்போது மலேசியா, மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை வழங்குவதைத் தவிர்த்து வருகிறது,” என்று, கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில், பெர்னாமா வானொலிக்கு வழங்கிய ஒரு நேர்காணலின் போது அவர் கூறினார்.
தற்போது உள்ள சட்டங்கள், ஊழலில் ஈடுபடுபவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைவாசத்தையே வழங்குகிறது என்றார் சுக்ரி.
“என்னிடம் கேட்டால், அவர்களுக்குக் கசையடி கொடுக்க வேண்டும், இது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்,” என்றார் அவர்.
எம்.ஏ.சி.சி. சட்டம் 2009-ன் கீழ், ஊழல் தொடர்பான எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனையாக, அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் குறைந்தபட்சம் RM10,000 அபராதம் அல்லது கையூட்டின் மதிப்பில் ஐந்து மடங்கு (எது அதிகமானதோ) அபராதமாக விதிக்கப்படுகிறது.