1எம்டிபி : போலிஸ் நஜிப்பை அழைக்கும், அமர் சிங்

அரச மலேசியக் காவற்படை (பிடிஆர்எம்), 1எம்டிபி வழக்கு தொடர்பிலான விசாரணைக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக்கை அழைக்கவுள்ளது.

புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், அமீர் சிங் இஷார் சிங், அவ்வழக்கு விசாரணையை நிறைவுசெய்ய, நஜிப்பிடமிருந்து சில தகவல்கள் பிடிஆர்எம்-க்குத் தேவைபடுவதாகக் கூறினார்.

இவ்வழக்கு விசாரணையின்போது, பல்வேறு தனிநபர்களிடமிருந்து 70-க்கும் அதிகமான ஆதாரங்களைப் பிடிஆர்எம் பதிவு செய்துள்ளதாகவும், நஜிப்பின் சாட்சியத்தைப் பதிவு செய்வதற்காக, அவர் மீண்டும் அழைக்கப்படுவார் என்றும் அமர் கூறினார்.

“நஜிப் மட்டுமின்றி, மே மாதம், 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர், 1எம்டிபி குறித்து தனது உரையில் பேசிய, 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கண்டா கந்தசாமிக்கும், கடந்த செவ்வாய்க்கிழமை போலிஸ் அழைப்பு விடுத்ததை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்,” என அவர் இன்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

விரைவில், கடந்த ஜூன் மாதம் போலிஸ் கைப்பற்றிய நகைகள் தொடர்பான விசாரணைக்கு, அந்த முன்னாள் பிரதமரின் மனைவி ரொஸ்மா மன்சூரை போலிஸ் அழைக்கவுள்ளதாக, போலிஸ் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி, கடந்த புதன்கிழமை தொடக்கம் நான்கு நாள்களாக, எம்.ஏ.சி.சி.-யின் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர், அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம்-ஐ, 1எம்டிபி வழக்கில் தொடர்புடையவர் என்ற நம்பிக்கையில், போலிஸ் விசாரணைக்கு அழைக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கு இல்லை என்றும் நூர் ரஷிட் தெரிவித்தார்.

-பெர்னாமா