ஊழல் எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர், ஈப்போவில் பிறந்த, புகழ்பெற்ற நடிகரான மிசேல் இயோவை “மலிவான சந்தர்ப்பவாதி” என விவரித்துள்ளார்.
‘இவான்ஹோ பிக்சர்ஸ்’ –உடன் இணைந்து, ‘தி பில்லியன் டோலர் வேல்’ (பில்லியன் டாலர் திமிங்கிலம்) எனும் – 1எம்டிபி ஊழல் மற்றும் அதன் “சூத்திரதாரி” ஜோ லோ தொடர்புடையது – புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக மிசேல் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“இதுபோன்ற மலிவான சந்தர்ப்பவாதிகளுக்குப் புதிய மலேசியாவில் இடம் இல்லை,” என்று, சி4 நிர்வாக இயக்குநர் சிந்தியா கேப்ரியல் இன்று தெரிவித்தார்.
“நேர்மை எங்கே உள்ளது? ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் அவர் (முன்னாள் பிரதமர்) நஜிப் மற்றும் அவரது சக ஊழியர்களுடன் இருந்தார் … ” என்று அவர் கூறினார்.
1எம்டிபி ஊழலை விசாரணை செய்யும் விசேட குழுவில் சிந்தியா கேப்ரியலும் உள்ளார். மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்தக் குழு அமைக்கப்பட்டது.
பொதுத் தேர்தலுக்கு முன்னர், மிசேல் நஜிப்பை ஆதரித்து வந்துள்ளார்.
2013-ல், சிலாங்கூர் சீனர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் நஜிப்பை அவர் பாராட்டி பேசியிருந்தார்.
மக்களுக்கு அதிகம் நன்மை செய்த தலைவர் நஜிப் என அவர் விவரித்ததாகக் கூறப்படுகிறது.
“அவர் பிரதமராகத் தொடர்ந்து இருக்க வேண்டுமென நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன், அவருக்கு வலுவான ஆதரவை நீங்கள் கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று மிசேல் கூறியுள்ளார்.
இவ்வாண்டு தொடக்கத்தில், நஜிப் ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனையைக் கையாளும் விதத்தையும் மிசேல் பாராட்டி பேசியிருந்தார்.
‘தி பில்லியன் டாலர் வேல்’ புத்தகத்தை, வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகையாளர்களான, டோம் ரைட் மற்றும் பிராட்லி ஹோப் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர்.