கர்பால் சிங் தேசநிந்தனை வழக்கு மீதான நீதிமன்ற விசாரணை பற்றிய தகவல் கோருகிறார் சங்கீதா

 

தமது தந்தை காலஞ்சென்ற கர்பால் சிங் மீதான 2016 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற தேசநிந்தனை வழக்கு பற்றிய நீதிமன்ற விசாரணையின் விளைவு என்ன என்று கேட்டு வழக்குரைஞர் சங்கீதா கவுர் டியோ தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் மற்றும் சட்ட அமைச்சர் விகே லியு ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளார்.

இந்த நீதிமன்ற விசாரணை கடந்த ஆகஸ்ட் 31-இல் அறிவிக்கப்பட்டது. இதுவரையில் எவ்வித தகவலும் இல்லாததால், தாம் இக்கடிதங்களை கடந்த வாரம் அனுப்பியதாக சங்கீதா கூறினார்.

இது பற்றிய விசாரணை குறித்து தலைமை நீதிபதி மலான்ஜும் நான்கு வாரங்களுக்கு முன்னர் உறுதி அளித்திருந்தார். அந்த விசாரணையின் முடிவு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கும் தமக்கும் உண்டு என்றார் சங்கீதா.

கடந்த ஆகஸ்ட் 31-இல், கர்பால் வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற ஒழுங்கின்மை இருந்ததா என்பது பற்றியும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹமிட் சுல்தான் அபு பேக்கர் இன்னொரு நீதிபதியால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது பற்றியும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது ஓர் உள்விசாரணை நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி மலான்ஜும் தெரிவித்திருந்தார்.

இந்த விசாரணையின் முடிவுகள் கிடைக்கப் பெற்றதும் தலைமை நீதிபதி பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பார் என்று தலைமை நீதிபதியின் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கை கூறிற்று.