மலேசியர்களுக்கு விற்கப்படும் முன்கூட்டி கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகளுக்கு விற்பனை, சேவை கிடையாது. இந்த வரி-விலக்கை அமல்படுத்த தவறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வரி-விலக்கு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
“தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அவற்றின் கணக்கிடும் முறைகளைத் திருத்தி அமைக்க 10, 14 நாள்கள் ஆகும் என்பது புரிகிறது.
“ஆனால், உத்தரவு தெளிவானது. முன்கூட்டிக் கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகள் வாங்கும் மலேசியருக்கு எஸ்எஸ்டி கிடையாது”, என கோபிந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்த அட்டைகளை வாங்கும் ஒருவர் மலேசியரா இல்லையா என்பதைக் கண்டறிய ஒரு வழிமுறை இருக்கிறது என்றாரவர்.
செப்டம்பர் முதல் நாள் எஸ்எஸ்டி அமலுக்கு வந்த பின்னர் முன்கூடடிக் கட்டணம் செலுத்திய அட்டைகளுக்கு எஸ்எஸ்டி கழித்துக்கொள்வதைக் கண்டு பயனீட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அதனை அடுத்து செப்டம்பர் 5-இல் மலேசியர்கள் வாங்கும் முன்கூட்டிக் கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகளுக்கு எஸ்எஸ்டி விதிப்பதைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நிதி அமைச்சு உத்தரவிட்டது.