பிடி இடைத்தேர்தல் : ஒருவர் தகுதி இழப்பு, எழுவர் போட்டி

அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் நுழைய வழிவிடும் வகையில், டான்யால் பாலகோபால் அப்துல்லா போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.

இன்று காலை 8 மணிக்கு, போர்ட்டிக்சன் நகராண்மைக் கழக மண்டபத்தில் அன்வார் இப்ராஹிம்முக்கு ஆதரவாக பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த சுமார் 1000 பேர் கூடியிருந்த வேளை, பாஸ் கட்சிக்கு ஆதரவாக சுமார் 100 பேர் அங்கு திரண்டிருந்தனர்.

இதற்கிடையில், முன்னாள் நெகரி செம்பிலான் மந்திரி பெசார் இசா சமாட்டின் ஆதரவாளர்களில் சிலரும் அவருக்காகப் பதாகைகள் ஏந்தி அங்கு நின்றிருந்தனர்.

அன்வாருக்கு ஆதரவாக, பிகேஆர் கட்சித் தலைவர்களில், துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமீருட்டின் ஷாரி ஆகியோருடன், டிஏபி லிம் குவான் எங்-கும் அங்கு இருந்தார்.

காலை மணி 10 வரை, எண்மர் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தனர். காலை மணி 10.30 அளவில், வேட்புமனு தாக்கல் நிறைவடைவதாக தேர்தல் அதிகாரி கைரி மாமோர் அறிவித்தார். எட்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் எ ராஜேந்திரா போட்டியிடும் தகுதியை இழந்தவேளை, எழுவரின் வேட்புமனுக்களைத் தேர்தல் அதிகாரிகள் அங்கீகரித்தனர்.

பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் (ஹராப்பான்) , லெஃப்டினன் கேணல் முகமட் நஷாரி மொக்தார் (பாஸ்), முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இசா சமாட் (சுயேட்சை), லேய் செக் யான் (சுயேட்சை) , கீ ச்சீ யுவேன் (சுயேட்சை) , ஸ்தீவி ச்சான் (சுயேட்சை), முகமட் சைஃபுல் புக்காரி அஸ்லான் (சுயேட்சை) ஆகியோர் எதிர்வரும் அக்டோபர் 13-ல் பிடி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

அன்வாரும் சைஃபுல்லும் கைக் குலுக்கிக் கொண்டனர்

வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு, தன் இருக்கையை நோக்கி வந்த அன்வாரை, சைஃபுல் எழுந்து நின்று வரவேற்றார். இருவரும் கைக்குலுக்கிக் கொண்டனர்.

அதன் பிறகு, சைஃபுல் தனது வேட்புமனு பாரங்களைத் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

இதற்கிடையே, அம்னோ முன்னாள் அமைச்சரான சைனுடின் மைடின் தனது டுவிட்டரில், சைஃபுல் போன்ற ஒரு “பலவீனமானவர்” பிடி-இல் அன்வாருக்குச் சவால் விடுக்கத் தயாராக உள்ளபோது, அம்னோ சார்பில் வேட்பாளரை நிறுத்தாதது, அம்னோவின் கௌரவத்திற்கு ஒரு பெரும் அடி எனக் குறிப்பிட்டுள்ளார்.

அன்வார் பிரதமர் பதவிக்கு வரும்போது, அம்னோ மீது அவருக்கு “அனுதாபம்” ஏற்பட வேண்டும் என்பதற்காகவே அம்னோ வேட்பாளரை நிறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி, அது ஒரு ‘வீண் செலவு’ என்று கூறியதோடு, அந்த இடைத்தேர்தலை அம்னோ புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

‘குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த வேண்டும்’ பதாகைகளுடன் பிஎஸ்எம்

இதற்கிடையே, இன்று காலை 8 மணியளவில், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களில் சிலர், வேட்புமனு தாக்கல் செய்யும் மண்டபத்தின் அருகில் கூடியிருந்தனர்.

குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்த கோரி, பதாகைகளை ஏந்தி இருந்த அவர்கள், அங்கு வந்திருந்தவர்களிடம், அது தொடர்பான கையேடுகளையும் விநியோகித்தனர்.

“இந்த இடைத்தேர்தலில், மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்.

“குறைந்தபட்ச சம்பள பிரச்சனைக்கு எதிராகப் போராட, நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவுள்ளோம்,” என பிஎஸ்எம் மத்திய செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

முதன்முறையாக பினாங்கிற்கு வெளியே அன்வார் போட்டி

ஒருவேளை, இந்த இடைத்தேர்தலில் அன்வார் வெற்றி பெற்றால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல, துன் டாக்டர் மகாதிருக்குப் பதிலாக அன்வார் பிரதமராக நியமிக்கப்படுவார்.

நாடாளுமன்ற நாற்காலிக்கு, பினாங்கிற்கு வெளியே அன்வார் போட்டியிடுவது இதுவே முதன்முறை ஆகும். இதுவரை, 6 முறை அவர் பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலேயே போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பொதுத் தேர்தலில், அன்வாரின் மகள், நூருல் இஷா அத்தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.