இசா சமாட்: பிடியை அம்னோ வேண்டாம் என்றது, நான் எடுத்துக் கொண்டேன்

முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசாரான இசா சமட், அம்னோ போர்ட் டிக்சன் இடைத் தேர்தலைப் புறக்கணித்ததால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தான் போட்டியிடுவதாகக் கூறினார்.

“இது என் சொந்த ஊர். இந்தத் தொகுதி காலியாக உள்ளது. அம்னோ போட்டியிட மறுக்கிறது.

“அதனால் போர்ட் டிக்சன்காரனான நான் வாய்ப்பைப் ப்யன்படுத்திக்கொண்டு போட்டியிடுகிறேன்”, என்றார்.

இன்று போர்ட் டிக்சனில், தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த பின்னர் இசா செய்தியாளர்களிடம் பேசினார்.

நீண்ட காலமாகவே உள்ளூர் தலைவர்கள் பலர் இசாவை அங்கு போட்டியிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.

“அதற்கு வாய்ப்பு இப்போதுதான் வந்தது”, என்றாரவர்.

22 ஆண்டுகள் 1982-இலிருந்து 2004வரை நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக இருந்தவர் இசா. அம்னோ உறுப்பினர்களும் போர்ட் டிக்சன் பொதுமக்களும் தன்னை ஆதரிப்பார்கள் என்றவர் நம்புகிறார்.

இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அம்னோவிலிருந்து விலகினார்.

இப்போதைக்கு இடைத் தேர்தலில் மட்டுமே அவர் கவனம் செலுத்த விரும்புகிறார். அம்னோவில் மீண்டும் சேர்வது பற்றி இடைத் தேர்தலுக்கு அப்புறம்தான் முடிவு செய்வார்.

சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் இசாவின் குறியெல்லாம் நாடாளுமன்ற “இருக்கை”யின்மீதுதான். அதனால்தான் தேர்தல் சின்னமாக ஒரு நாற்காலியையே தேர்ந்தெடுத்துள்ளார்.