பிடி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கலின் போது, பிஎஸ்எம் #1050 எதிர்ப்பு போராட்டம்

பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட RM1050 குறைந்தபட்ச சம்பளத்தை எதிர்த்து, இன்று காலை, போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை, பதாகைகளுடனும் சுட்டறிக்கைகளுடனும் அங்குக் கூடியிருந்த அவர்கள், RM1050 குறைந்தபட்ச சம்பளம் என்பது தொழிலாளர் வர்க்கத்தைக் கேவலப்படுத்தும் ஒரு நடவடிக்கை எனக் கருதுவதாகத் தெரிவித்தனர்.

முன்னதாக, மனிதவள அமைச்சின் மூலம் அரசாங்கம் நிறுவியுள்ள, குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை விவாதிக்கும் ஆலோசனைக் குழு நடத்தியப் பேச்சுவார்த்தைகளில், அனைத்து தரப்பினரும் RM1500 குறைந்தபட்ச சம்பளம் இந்த நேரத்தில் ஏற்புடையது அல்ல, ஆனால் எதிர்காலத்தில் அது சாத்தியப்படலாம் எனக் கூறப்பட்டது என, இன்று பிஎஸ்எம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது உயர்ந்துவரும் செலவினங்களுக்கு ஏற்ப, கணிசமான குறைந்தபட்ச ஊதியம் தேவைப்படுகிறது என்றும், எனவே RM150-ஐ ஏற்றி, RM1150-ஆகக் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்க அனைத்து தரப்பினரும் இறுதியில் ஒப்புக் கொண்டதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், முதலாளிகள் தரப்பு குறைந்தபட்ச சம்பளமாக RM1050 முன்மொழிந்தது. இது பேங்க் நெகாரா உட்பட பலதரப்பினர் மேற்கொண்ட ஆய்வுகளில், மிகக் குறைந்த சம்பளமாகக் கருதப்படுகிறது. துரதிஸ்டவசமாக, இத்தொகையை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் துறை அமைச்சு அறிவித்தது. இது நியாயமற்ற விஷயம், மனிதவள அமைச்சு இதனை அறிவிக்காததில், ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த இடைத்தேர்தலில், மக்களின் பிரச்சனைகளை, முக்கியமாக குறைந்தபட்ச சம்பளப் பிரச்சனையைப் புதிய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர தாங்கள் பயன்படுத்தவுள்ளதாக பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார்.

காலையில் அங்குக் கூடி இருந்தவர்களிடம் சுற்றறிக்கைகளையும் அவர்கள் விநியோகம் செய்தனர். அச்சமயம் அங்கு வந்த சில பிகேஆர் மகளிர், அன்வாருக்கு வாக்களித்து, வெற்றிபெற செய்யுங்கள். அவர் பிரதமரானால், குறைந்தபட்ச சம்பளத்தை உயர்துவார் எனக் கூறிச் சென்றனர்.

“பி.எஸ்.எம். கட்சி மற்றும் இடதுசாரிகளின் போராட்டங்கள், தொழிலாளர் வர்க்கத்திற்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் நிறைய நன்மைகளைக் கொண்டுவந்துள்ளது.

“திடீரென வேலையிலிருந்து நீக்கப்படும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, பி.எஸ்.எம். உருவாக்கிய ‘தொழிலாளர் வேலை நிறுத்த உண்டியல்’ திட்டம், பிறகு அரசாங்கத்தால் ‘தொழிலாளர் காப்புறுதி திட்ட’மாக உருவாக்கப்பட்டது. இது தொழிலாளர்களுக்கான எங்களின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியில் ஒன்று,” என அவர் தெரிவித்தார்.

“இதுபோல, எங்களின் இன்னும் பல போராட்டங்கள் ஏழை, தொழிலாளர் வர்க்கத்திற்கு நன்மைகளையேக் கொண்டுவந்துள்ளது.

“எனவே, இந்த இடைத்தேர்தலை, மக்கள் பிரச்சனைகளைத் தலைவர்களின் பார்வைக்குக் கொண்டுசெல்ல பயன்படுத்த முனைந்துள்ளோம்,” என எஸ் அருட்செல்வன் கூறினார்.