மகாதிர் முழு ஐந்தாண்டு தவணைக்கும் பிரதமராக இருக்க வேண்டும், ஹாடி கூறுகிறார்

 

பிரதமர் மகாதிர் முகமட் தொடர்ந்து ஐந்து ஆண்டுகால தவணைக்கும் பிரதமராக இருந்து நாட்டை நிருவாகம் செய்வதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு அளிக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்று கூறினார்.

சில தரப்பினர், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் உட்பட, பிரதமர் பதவியை அடைவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அரசியல் நன்னெறிக்கு ஏற்றதாக இல்லை என்றாரவர்.

பேராசை பிடித்த ஒருவர் ஆளுவது நமக்கு வேண்டாம், ஏனென்றால் அப்பேர்ப்பட்டவர் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை நிறைவேற்ற மாட்டார். ஆகவே, தற்போதைய பிரதமர் தொடர்ந்து நாட்டை அவருக்கு எவ்வளவு காலத்திற்கு நிருவாகம் செய்ய முடியுமோ அவ்வளவு காலத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று ஹாடி மேலும் கூறினார்.

கருத்து வேறுபாடு இருக்கின்ற போதிலும், மகாதிருக்கு போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும் ஏனென்றால் அவருக்கு பேரளவான அனுபவம் இருக்கிறது மற்றும் கடமையை நிறைவேற்றும் ஆற்றல் இருக்கிறது என்று ஹாடி கோல நெராங்கில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் பாஸ், அம்னோவுடன் ஒத்துழைக்குமா என்று கேட்டதற்கு, ஒத்துழைப்பு பலாக்கோங் மற்றும் ஶ்ரீ செத்தியா இடைத் தேர்தல்களின் போது இருந்ததைப் போல் இருக்கும். அம்னோ வேட்பாளரை நிறுத்தாத போது, பாஸ் நிறுத்தும். அது ஒத்துழைப்பு என்றாரவர்.

இந்தத் தேர்தலில் பின்பற்றப்படும் வியூகம் குறித்து இப்போதைக்கு எதுவும் தெரியாது என்று கூறிய ஹாடி, அம்னோ உதவ விரும்பினால், அது நன்கொடை கொடுக்க விரும்பினால்கூட, நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் என்றாரவர்.