ஹரப்பான் ஆட்டம் கண்டுள்ளது, நமக்கு சான்ஸ் இருக்கு, அம்னோவை விட்டு வெளியேறாதீர், அம்னோ தலைவர் கூறுகிறார்

அம்னோவை விட்டு வெளியேறும் படலம் தொடர்வதால். அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம், ஏனென்றால் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. பொறுமையாக இருங்கள். நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூறினார்.

ஹரப்பானில் நடக்கும் உள்போராட்டம் வெடித்து மத்திய அரசை ஆபத்தான நிலைக்கு தள்ளி விடும்.

“இந்த நிலையற்றதன்மை அரசாங்கத்தை வலுவற்ற நிலைக்குத் தள்ளிவிடும் மற்றும் அது எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம்.

“இந்தச் சூழ்நிலையில், அவர்கள் யாரைத் தேடுவார்கள்? இதில்தான் அம்னோ உறுப்பினர்களின் சக்தி இருக்கிறது.

“ஆகவே, வெளியேறும் எண்ணம் எதையும் கொண்டிருக்க வேண்டாம்”, என்று கோலாலம்பூரில் அம்னோவின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய ஸாகிட் கூறினார்.

எதிர்க்கட்சிகள், குறிப்பாக பிஎன் தோழமைக் கட்சிகள் மசீச, மஇகா, மைபிபிபி மற்றும் பார்ட்டி பெர்சத்து ராக்யாட் சாபா, ஒன்றுபட்டிருப்பதை வலியுறுத்திய ஸாகிட், ஹரப்பானுடன் அம்னோ ஓர் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிவருகிறார்.