ஹாடி அன்வாரை கேட்கிறார்: ஏன் முஸ்லிம்கள் பெரும்பான்மையில் இருக்கும் இடத்தில் போட்டியிடவில்லை?

 

அன்வார் இப்ராகிம் முஸ்லிம்கள் பெரும்பான்மையில் இருக்கும் தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என்று அன்வாரிடம் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கேட்டுள்ளார்.

நேற்றிரவு போர்ட் டிக்சன், தெலுக் கெமானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அவருக்கு (அன்வாருக்கு) ஏன் முஸ்லிம்கள் பெரும்பான்மையிலிருக்கும் இடத்தில் போட்டியிட தைரியமில்லை என்று ஹாடி கேட்டார்.

போர்ட் டிக்சனில் 43 விழுக்காடு மலாய்க்காரர்கள், 33 விழுக்காடு சீனர்கள் மற்றும் 22 விழுக்காடு இந்தியர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர்.

அன்வாரின் நிலையற்ற போக்கைக் கண்டித்த ஹாடி, அன்வார் வெவ்வேறு சமூகத்துடன் இருக்கும் போது வெவ்வேறு விதமாக நடந்துகொள்கிறார் என்றார்.

மசூதியில் இருக்கும் போது, அன்வார் அவரது சமய ஈடுபாட்டைக் காட்டுகிறார். இந்தியர்களுடன் இருக்கும் போது, அவர் இந்திய நடனங்கள் ஆடுகிறார். அன்வாரின் முன்னுக்குப்பின் முரணான நிலைக்கு இவற்றை ஹாடி எடுத்துக்காட்டாக கூறினார்.

நமக்கு நமது சொந்த கலாச்சாரம் இருக்கிறது. நாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், தமிழர் சமுதாயம் நம்மை மதிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த இடைத் தேர்தல் அசாதாரணமானது, ஏனென்றால் இது மலேசியாவின் பிரதமராக விரும்பும் ஒருவருக்காக திட்டமிட்ட ஒன்றாகும் என்று ஹாடி மேலும் கூறினார்.