அன்வார்மீது புதிதாக குதப்புணர்ச்சிக் குற்றம் சாட்டும் லொக்மான் ஆடமுக்கு எதிராக போலீஸ் புகார்

பிகேஆர் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம்மீது புதிதாக ஒரு குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டு என்று முகநூலில் வைரலாகிவரும் செய்தி தொடர்பில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடமுக்கு எதிராக பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் போலீஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளார்.

“அது போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் வேட்பாளரான அன்வார் இப்ராகிம் மீதான பொதுமக்களின் கருத்தை மாற்ற முனையும் தீய நோக்கங்கொண்ட ஒரு செய்தி என்று நினைப்பதால் அப்புகாரைச் செய்தேன்”, என பாஹ்மி இன்று போர்ட் டிக்சனில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

லொக்மான் மேலும் இதுபோன்ற “அடிப்படையற்ற” அறிக்கைகளை வெளியிடலாம் என்பதால் இவ்விவகாரத்தில் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், இப்புதிய குற்றச்சாட்டை மறுத்ததுடன் அது தம் கணவரின் அரசியல் பிம்பத்தைக் களங்கப்படுத்தும் ஒரு முயற்சி என்றும் சாடினார்.

“அது ஒரு பொய்யான செய்தி”, என்று வான் அசிசா குறிப்பிட்டார்.

லொக்மான் தன்னுடைய முகநூல் பக்கத்தில், சிங்கப்பூரின் மீடியாகோர்ப் இந்தோனேசிய மாணவர் ஒருவர் அன்வார் தன்னுடன் குதப்புணர்ச்சி கொண்டதாக சிங்கப்பூரில் போலீஸ் புகார் செய்தார் என்று செய்தி வெளியிட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

மீடியாகோர்ப் அப்படிப்பட்ட செய்தி எதையும் வெளியிடவில்லை என மறுத்து, லொக்மானைத் தொடர்புகொண்டு அச்செய்தியை அகற்றுமாறு கூறியுள்ளது. அப்படிப்பட்ட புகார் எதுவும் செய்யப்படவில்லை என சிங்கப்பூர் போலீசும் மறுத்திருப்பதையும் அது சுட்டிக்காட்டியது.