பிகேஆர் தேர்தல்: லாபிஸ் முடிவுகளை இரத்து செய்ய வேண்டும், ரஃபிசி கோரிக்கை

பிகேஆர் துணைத் தலைவர் வேட்பாளர் ரஃபிஸி ரம்லி, மத்தியத்திற்கான லாபிஸ் தொகுதி தேர்தல் முடிவுகளை இரத்து செய்யுமாறு, மத்தியத் தேர்தல் குழுவிடம் (ஜேபிபி) இன்று கோரிக்கை வைத்தார்.

தற்போது கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் ரஃபிஸி, வாக்களிப்பில் ஜேபிபி அதிகாரிகளின் தலையீடு இருந்ததாகக்  குற்றம் சாட்டியுள்ளார்.

ஜேபிபி தலைவர், ரஷிட் டின் மற்றும் மத்தியத் தேர்தல் புகார் குழுவின் தலைவர் டாக்டர் சையட் ஹுஸின் அலி ஆகியோருக்கு அனுப்பிய அறிக்கையில், தேர்தல் நடவடிக்கைகளில் முக்கியப் பலவீனம் மின்னணு வாக்களிப்பு முறைமையில் இருந்து வரவில்லை என ரஃபிஸி குறிப்பிட்டுள்ளார்.

“மாறாக, ஜேபிபி கண்காணிப்புக் குழுவினர் வாக்களிக்கும் போது, வாக்காளர்களிடம் வெளிப்படையாக வாக்குகள் திரட்டியுள்ளனர்,” என ரஃபிஸி குற்றம் சாட்டினார்.

அதற்கு ஆதாரமாக, வீடியோ ‘கிளிப்’கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“அதுமட்டுமின்றி, சில அதிகாரிகள் வாக்காளர்களுக்குப் பதிலாக வாக்கும் அளித்துள்ளனர்,” என அவர் மேலும் சொன்னார்.

நேற்று, ஜொகூரில் நடந்த பிகேஆர் தேர்தலில், கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, ரஃபிஸியை 827 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளினார்.

அஸ்மினுக்கு 5,852 வாக்குகள் கிடைத்த வேளை, ரஃபிஸிக்கு 5,025 வாக்குகளே கிடைத்தன.

ஜொகூருக்கு வெளியிலிருந்து வந்திருந்த ஜேபிபி அதிகாரிகள், எவ்வாறு இந்த சந்தேகத்திற்குரிய தேர்தல் முடிவுகளைக் கொடுத்தார்கள் என்பது பற்றி முழுமையான அறிக்கை தயார்செய்து வழங்கவுள்ளதாகவும் ரஃபிஸி கூறியுள்ளார்.

“லாபிஸ் தேர்தலில், வலுவான ஆதாரங்கள் இருப்பதால், நான் அங்குக் கிடைத்த தேர்தல் முடிவுகளை இரத்து செய்ய அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளேன்,” என்றார் அவர்.

ரஃபிஸியின் புகார் கடிதம், கட்சியின் இரண்டு மூத்தத் தலைவர்களான – டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், அன்வார் இப்ராஹிம் – மற்றும் தலைமைச் செயலாளர் சைஃபுட்டின் நஷுதியோன் இஸ்மாயில் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தெப்ராவ், லேடாங் மற்றும் பொந்தியானிலும் இதே நிலை

இதற்கிடையே, மலாக்கா மாநில பிகேஆர் உதவித் தலைவர், ஜி இராஜேந்திரன், தெப்ராவ், லேடாங் மற்றும் பொந்தியான் தொகுதி முடிவுகளையும் இரத்து செய்ய வேண்டுமென, ஜேபிபி-க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஜேபிபி கண்காணிப்புக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கையாளுதலுக்கு நான் ஒரு சாட்சி, எனவே, உடனடியாக அம்மூன்று இடங்களின் முடிவுகளையும் இரத்து செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

செர்டாங் துணைத் தலைவர், ஆர் சுரேஷ் குமார், பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இத்தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என ரஃபிஸி மற்றும் அவரது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டார்.

மேலே கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, ஜேபிபி-யின் பதிலைப் பெற மலேசியாகினி முயற்சி செய்கிறது.