நேற்று நடந்த, பிகேஆர் கட்சி தேர்தலில், ஜொகூர், லேடாங் நாடாளுமன்ற உறுப்பினர் சேட் இப்ராஹிம் சேட் நோ தோல்வியைத் தழுவினார்.
பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய லேடாங் தொகுதி தலைவருமான டாக்டர் சோங் ஃபாட் ஃபுல் 541 வாக்குகள் பெற்று, தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
பிகேஆர்-ஐச் சேர்ந்த மற்ற எம்பி-க்கள், தெப்ராவ் எம்பி ஸ்டீவன் சோங் ஷியாவ் யூன், ஜொகூர் பாரு எம்பி அக்மால் நாசீர் மற்றும் பத்து பகாட் எம்பி ரஷிட் ஹஸ்னோன் ஆகியோர் தங்கள் தொகுதித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டனர்.
தெங்காரா, பெங்கெராங், பாசீர் கூடாங், பாரிட் சூலோங் மற்றும் ஆயேர் ஈத்தாம் ஆகிய ஐந்து தொகுதிகளின் தலைவர்களும் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
பிகேஆர் தேர்தல் குழுவின் துணைத் தலைவர், அட்ஸ்மான் ஹெட்ரா, எந்தவொரு தொழில்நுட்பக் கோளாரும் இன்றி, ஜொகூர் மாநில, 24 தொகுதிகளுக்கான பிகேஆர் கட்சி தேர்தல் சுமூகமாக நடந்தது மனநிறைவை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், 37,934 வாக்காளர்களில், 10,725 பேர் மட்டுமே, நேற்று வாக்களித்துள்ளதாக அட்ஸ்மான் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
செகாமாட்டில் 39.29 விழுக்காடு, பாகோவில் 39.77 விழுக்காடு, கூலாயில் 37.10 விழுக்காடு , செகிஞ்சாங்கில் 35.92 விழுக்காடு , சிம்பாங் ரெங்கத்தில் 34.07 விழுக்காடு , பக்ரியில் 30.81 விழுக்காடு , பாரிட் சூலோங்கில் 30.61 விழுக்காடு மற்றும் பிற தொகுதிகளில் 11.72-லிருந்து 28.77 விழுக்காடு உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்துள்ளதாக தெரிகிறது.
இத்தேர்தலில் 53 வேட்பாளர்கள் (மொத்தம் 24 தொகுதிகள்) தலைவர் பதவிக்காகப் போட்டியிட்டுள்ள வேளை, 163 பேர் துணைத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் செயலவைக்காகப் போட்டியிட்டுள்ளனர்.