அன்வாருக்கு ஸ்டீவி சானின் ஐந்து கேள்விகள்

பிடி தேர்தல் சுயேச்சை வேட்பாளர் ஸ்டீவி சான், ஐந்து கேள்விகளை முன்வைத்து பிகேஆர் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிரபலமாக விளங்கும் ஸ்டீவி சான், மே 9இல்தான் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது என்பதால் இவ்வளவு அவசரமாக ஏன் ஓர் இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதைத் தாமும் மக்களும் அறிந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.

போர்ட் டிக்சன் எம்பி டானியல் பாலகோபால் அப்துல்லா, அன்வார் போட்டியிடுவதற்காக அத்தொகுதியை செப்டம்பர் 12-இல் காலி செய்ததை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

அன்வார் பதிலளிக்க சான் முன்வைக்கும் ஐந்து கேள்விகள் இவை:

அவர் ஏன் அவரின் மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் தொகுதியான பாண்டானிலோ மகள் நூருல் இஸ்ஸாவின் பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலோ போட்டியிடவில்லை?

எதற்காக ஓர் இடைத் தேர்தலின் வழியாக நாடாளுமன்றத்துக்குள் மறுபடியும் அடியெடுத்து வைக்க விரும்புகிறீர்கள்?

எதற்காக இந்த ‘பிடி திட்டம்’?

நியாயமான காரணமின்றி பதவி விலகும் ஒரு பிரதிநிதியை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?

இம்முறை வென்றால் அடுத்த முறையும் போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிடுவீர்களா?

இக்கேள்விகளுக்கு அன்வார் ஊடகங்களில் பதிலளிக்கலாம் அல்லது தம்முடன் நேரடி விவாதத்தில் ஈடுபட விரும்பினால் அதற்கும் தாம் தயார் என்று சான் கூறினார்.