கட்சியிலிருந்து வெளியேறியவர்கள்மீது வழக்குத் தொடுப்பது பயனற்றது- நஸ்ரி

கட்சியிலிருந்து வெளியேறிய அம்னோ எம்பிகள்மீது வழக்குத் தொடுப்பது வீண்வேலை என்கிறார் முகம்மட் நஸ்ரி அசிஸ்.

“ஏனென்றால் இதுபோன்ற நடவடிக்கை இதற்குமுன்பும் எடுக்கப்பட்டது. ஆனால், முடிவு அம்னோவுக்குச் சாதகமாக அமையவில்லை”, என அந்த பாடாங் ரெங்காஸ் எம்பி கூறினார்.

“அது பயன் தராது. முன்பு நடந்ததுபோலவே அது நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படும்.

“முன்னாள் வழக்குரைஞரான எனக்கு கட்சி எப்படி வழக்குத் தொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை”, என முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான நஸ்ரி தெரிவித்ததாக சினார் ஹரியான் கூறிற்று.

அம்னோ உறுப்பினர்கள் கட்சிக்கு விசுவாசம் தெரிவிக்கும் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தாலும் அது நீதிமன்றத்தில் எடுபடாது என்று நஸ்ரி கூறினார்.

கடந்த வார இறுதியில் அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய கட்சித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, கட்சியிலிருந்து வெளியேறிய அம்னோ எம்பிகளுக்கு அவர்கள் நாடாளுமன்ற இருக்கைகளைக் காலி செய்யுமாறும் “செலவுத்தொகையை”த் திருப்பிக் கொடுக்கும்படியும் கூறும் நீதிமன்ற அழைப்பாணைகள் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறியது குறித்துக் கருத்துரைத்தபோது நஸ்ரி அவ்வாறு கூறினார்.