நான் அன்வாரிடம் மன்னிப்புக் கேட்டதே இல்லை, மகாதிர் பிபிசி-இடம் சொன்னார்

1998-ல், அன்வார் இப்ராஹிமைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக்கியதற்காக, தாம் அவரிடம் இதுவரை மன்னிப்பு கேட்டதில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார்.

14-வது பொதுத் தேர்தலில், (ஜிஇ-14) அவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியபோது, அன்வாரின் முந்தைய வழக்கு பிரச்சனைகள் எழவில்லை என டாக்டர் மகாதிர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, முந்தையப் பிரதமரைப் பதவிலிருந்து அகற்றுவதிலேயே அவர்களது கவனம் இருந்ததாக, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவருமான அவர், பிபிசி நேர்காணலில் கூறினார்.

மேலும், பிபிசியில் நேர்காணல் செய்தவர், மகாதிர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், அதைச் சரிசெய்ய விரும்புவதாகவும் அன்வார் ஒரு நேர்காணலில் கூறியது பற்றி கேட்டபோது, டாக்டர் மகாதிர் அதனை மறுத்தார்.

“நான் அவரிடம் (அன்வார்) மன்னிப்பு கேட்டதில்லை, மற்றவர்கள் என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், நான் இதுவரை அதிகாரப்பூர்வமாக அவரிடம் மன்னிப்பு கேட்டதில்லை,” என்று அவர் கூறினார்.

அன்வாருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி, மகாதிர் வருத்தப்பட்டாரா அல்லது குற்ற உணர்வு கொண்டாரா என்று கேட்டபோது, நீதிமன்றத் தீர்ப்புக்கு அவர் பொறுப்பேற்க முடியாது என்று டாக்டர் மகாதிர் கூறினார்.

“அவர் சிறை செல்ல வேண்டி உள்ளதே என்பதற்காக நான் வருத்தப்பட்டேன். ஏதாவதொன்று செய்துவிட்டு, நீதிமன்றத் தீர்ப்பினால் சிறையில் அடைக்கப்படுபவர்களைக் கண்டு நான் வருந்துகிறேன்,”  என்று அவர் கூறினார்.

1998-ல், பாலியல் முறைகேடு குற்றத்திற்காக, டாக்டர் மகாதிர் அன்வாரைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக்கினார். அதன்பின்னர், நீதிமன்றம் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, தண்டனை வழங்கியது.

ஆனால், அன்வார், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியிலானவை என்றும், டாக்டர் மகாதிரால் அவை வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டவை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

கடந்த மார்ச் மாதம், சின் சியூ டெய்லி பத்திரிக்கைக்கான சிறப்பு நேர்காணலில், கடந்த காலத்திற்குத் திரும்பிச் செல்லமுடியுமானால், நான் அன்வாரைப் பதவியிலிருந்து விலக்க மாட்டேன் என்று மகாதிர் கூறியிருந்தார்.

சட்டபூர்வமாகச் செயல்பட்டதால், தாம் தவறான முடிவை எடுத்துவிட்டதாக அவர் கூறினார்.

“அரசியல் ரீதியாக என்றால், நான் அதைச் செய்திருக்கமாட்டேன். நான் பிரதமராக இருந்தபோது, மக்கள் வெறுக்கக் கூடிய எதையும் செய்ய மாட்டேன் என்று நான் உறுதி அளித்திருந்தேன்,” என்றும் அவர் கூறியிருந்தார்.