முன்னாள் பிரதமரின் மனைவி, ரொஸ்மா மன்சோரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நாளை மீண்டும் அழைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இன்று மாலை 6 மணியளவில், ரொஸ்மாவின் வழக்கறிஞர், கீதன் ராம் விண்சென்ட் எம்ஏசிசி-இடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றதாகவும், அதில் ரொஸ்மா நாளை காலை 11 மணிக்கு எம்ஏசிசி தலைமையகம் வரவேண்டுமெனக் கூறப்பட்டதாகவும் ரொஸ்மாவுக்கு நெருக்கமானவர் தகவல் கொடுத்தார்.
விசாரணைக்காக, ரொஸ்மா அழைக்கப்படுவது இதுவே இறுதியாக இருக்கலாம் என்றும், நாளை அவர் கைது செய்யப்படும் சாத்தியமும் உண்டு என்றும் அவர் மேலும் கூறினார்.
ஒருவேளை நாளை ரொஸ்மா கைது செய்யப்பட்டால், நாளை மறுநாள், வியாழனன்று அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம், நஜிப் இராசாக்கின் வழக்கும் அன்றைய தினமே கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக வரவுள்ளது.
இதற்கிடையே, நாளை காலை 10 மணிக்கு, ரொஸ்மா எம்ஏசிசி தலைமையகம் வரவுள்ளதை எம்ஏசிசி தரப்பு, மலேசியாகினியிடம் உறுதிபடுத்தியது.