சைஃபுல்லின் முதல் ‘அடி’ : அன்வார் ‘கண்ணியமற்றவர்’

பிடி  இடைத்தேர்தல் | தேர்தல் பிரச்சாரத்தின் நான்காவது நாளான இன்று, சுயேட்சை வேட்பாளர் சைஃபுல் புக்காரி அஸ்லான், தனது முன்னாள் முதலாளியும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருமான அன்வார் இப்ராஹிம் மீது தாக்குதல்களைத் தொடங்கினார்.

மலேசியாகினி சந்தித்தபோது, அன்வார் ‘கண்ணியம்’ இல்லாத மனிதர் என சைஃபுல் தெரிவித்தார்.

“இந்த இடைத்தேர்தல், தனிமனிதர் ஒருவரின் விருப்பத்திற்காகவே நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

“அதுமட்டுமல்ல, இந்தத் தேர்தலுக்காக மக்கள் மற்றும் அரசாங்கத்தின் RM3.6 மில்லியன் பணம் பயன்படுத்தப்படுகிறது, இது என் கோபத்தை அதிகரிக்கிறது.

“ஆக, இதுவரை, வீண் செலவுகளையும் ஊழலையும் எதிர்த்துப் போராடியக் கட்சியின் அறநெறியும் கௌரவமும் இப்போது எங்கே, தனிப்பட்ட ஒருவரின் சுயநலத்திற்காக மக்கள் பணம் செலவளிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது,” என்று மலேசியாகினி-இடம் அவர் கூறினார்.

“அன்வாரின் இந்தப் போக்கை, அப்படியே விட்டுவிட முடியாது காரணம், எதிர்க்காலத்தில் அதுவே கலாச்சாரமாகிவிடும்.

“நான் ஏன் கலாச்சாரமாகிவிடும் என்று சொல்கிறேன்? காரணம், இதற்கு முன்னதாக, பெர்மாத்தாங் பாவ் மற்றும் காஜாங்கில் இதுபோன்ற தேர்தல்கள் நடந்துள்ளன, இப்போது இது மூன்றாவது முறை.

“இதை இப்படியே விட்டால், எதிர்க்காலத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கும். இது நம் நாட்டு அரசியலில் ஒரு கலாச்சாரமாக உருவாவதை நான் விரும்பவில்லை, இது சரியல்ல,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, அத்தொகுதியை விட்டுக்கொடுத்த, முன்னாள் எம்பி டான்யால்-ஐயும் சைஃபுல் சாடினார்.

“கடந்த பொதுத்தேர்தலில், மக்கள் எத்தனை மணி நேரம் காத்திருந்து, வாக்களித்து, உன்னைத் தேர்ந்தெடுத்தார்கள்? உன் கண்ணியம் என்னவானது? இதில் வாக்குகள் கேட்டுவேறு பிரச்சாரம் செய்கிறாய்? உனக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா?” எனக் கடுமையாக சாடினார்.

இம்முறை, மக்கள் வாக்களிக்க வெளிவருவது குறைந்துபோனாலும் வியப்பில்லை, காரணம் மக்கள் சலிப்படைந்துவிட்டனர் என்று சைஃபுல் மேலும் கூறினார்.

“50 விழுக்காட்டினர் வாக்களிக்க வந்தால் கூட பெரிய விஷயம்தான், காரணம் மக்கள் வெறுத்துவிட்டனர்,” என்றார் அவர்

இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, சைஃபுல் ‘பிரச்சார இயக்க உண்டியல்’-ஐயும் தொடக்கினார்.

அந்தச் சிறப்பு நிதி தனிப்பட்ட இலாபத்திற்காக அல்ல, “அரசாங்க நிலைத்தன்மைக்காக” அது உருவாக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கமளித்தார்.