கேஎல்ஐஏ-இல் தங்கியிருந்த சீரியா நாட்டவருக்கு 14நாள் தடுப்புக் காவல்

ஏழு மாதங்களாக 2வது கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலைய முனையத்தைத் தங்குமிடமாக்கிக் கொண்டிருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட சீரியா நாட்டவர் ஹசான் அல்-கொண்டார், 14 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாராம்.

அச் செய்தி உண்மைதான் என்று கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சுல்கிப்ளி ஆடம்ஷா உறுதிப்படுத்தியதாக மலாய் மெயில் கூறிற்று.

“முறையான அனுமதியின்றி மலேசியாவுக்குள் நுழைய முயன்றதற்காக அவர்மீது 1959/63 குடிநுழைவுச் சட்டம் பிரிவு 6(1) (ஏ)-இன்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது”, என்றவர் சொன்னதாக அந்நாளேடு கூறியது.

அக்குற்றத்துக்கு ரிம10,000 வரை அபராதம் அல்லது ஐந்தாண்டுவரைக்குமான சிறைத்தண்டனை அத்துடன் ஆறுக்குமேல் போகாத பிரம்படியும் கொடுக்கப்படலாம்.

மார்ச் 7-இலிருந்து கேஎல்ஐஏ2-ஐ தங்குமிடமாக்கிக் கொண்டிருந்த ஹசான் கைது செய்யப்பட்டார் என நேற்று பெர்னாமா அறிவித்திருந்தது.

ஹசானுக்கு மலேசியா வழங்கிய நுழைவு அனுமதி காலாவதியானதும் அவர் கம்போடியா செல்ல முயன்றார் என்றும் அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் மலேசியாவுக்கே திரும்பி வந்தார் என்றும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்தபார் அலி தெரிவித்ததாக அது கூறியது.

ஹசான் அவரது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்றாரவர்.

சீரியாவில் கட்டாய இராணுவச் சேவை செய்யாமலிருப்பதற்காக ஹசான் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி வந்திருப்பதாகத் தெரிகிறது.