நஜிப்பிடம் போலீஸ் விசாரணை; ரோஸ்மாவிடம் எம்ஏசிசி விசாரணை

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் வெவ்வேறு விசாரணைக் குழுக்கள் இன்று விசாரித்தன.

நஜிப் காலை மணி 10க்கு கோலாலும்பூரில் மெனாரா கேபிஜே-இல் உள்ள வணிகக் குற்றவியல் துறை(சிசிஐடி)க்கு வந்து சேர்ந்தார்.

தலைவாசலில் காத்திருந்த ஊடகங்களைத் தவிர்ப்பதற்காக கார் நிறுத்துமிடத்தில் இருந்தே கட்டிடத்துக்குள் சென்றார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடமும் ஒரு டஜன் நஜிப் ஆதரவாளர்களும் தங்கள் தலைவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அந்தக் கட்டிட வளாகத்தில் காத்திருந்தனர்.

1எம்டிபி விவகாரமாகத்தான் போலீஸ் நஜிப்பிடம் விசாரணை செய்வார்கள் என்று தெரிகிறது. கடந்த வாரமே சிசிஐடி தலைவர் அமர் சிங், நஜிப் “விரைவில்” விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று கூறி இருந்தார்.

அவ்விவகாரம் தொடர்பில் இதுவரை 70க்கும் மேற்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

புத்ரா ஜெயாவில், காலை மணி 10.40க்கு ரோஸ்மா, வழக்குரைஞர் ஆர். குமரேந்திரன் உடன்வர எம்ஏசிசி தலைமையகத்துக்குள் செல்லக் காணப்பட்டார்.

எம்ஏசிசிக்கு அவர் வருவது இது மூன்றாவது முறையாகும். கடந்த முறை அவர் வந்திருந்தபோது நடந்த விசாரணை 13 மணி நேரம் நீடித்தது.