முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கலாம் என்கிறார் அம்னோ உச்சமன்ற உற்ப்பினர் லொக்மான் நூர் ஆடம்.
ஜூலை 2-இல் அம்னோ தலைவருமான ஜாஹிட்டிடம் ஒன்பது மணி நேரம் எம்ஏசிசி விசாரணை நடத்தியது. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ரிம2.6 பில்லியன் நன்கொடை அளித்ததாகக் கூறப்படும் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தாம் நேரில் சந்தித்திருப்பதாக ஜாஹிட் கூறியதன் தொடர்பில் அவ்விசாரணை நடந்துள்ளது.
நஜிப் எவ்வளவுதான் ரிம2.6 பில்லியன் ஒரு நன்கொடை என்று கூறிக்கொண்டாலும் விசாரணையாளர்கள், அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) உள்பட, அது 1எம்டிபி-இலிருந்து வந்தது என்றுதான் அடித்துக் கூறுகிறார்கள்.
இதனிடையே லொக்மான், “நிதி அமைச்சு, போலீஸ், எம்ஏசிசி-இல் உள்ள நண்பர்கள் அளித்த தகவலின்படி” நஜிப்மீது 100 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றார்.
“இப்போது 32 குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். ஆனால் குறைந்தது 100 சுமத்துவதுதான் அவர்களின் திட்டம் என்று கேள்விப்பட்டேன்.
“இந்த வகையிலாவது நஜிப்பின் வாயைக் கட்டிபோடப் பார்க்கிறார்கள். இப்போதைக்கு அவர் மட்டும்தானே நிதி அமைச்சர் லிம் குவான் எங்கையும் (பிரதமர்) டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளுக்காகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்”, என்று லொக்மான் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.