எம்ஏசிசி ரோஸ்மாவைக் கைது செய்தது, நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்

முன்னாள் பிரதமர் நஜிப் இராசாக்கின் மனைவி, ரொஸ்மா மன்சூர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

இன்று மாலை 3.20 மனியளவில், எம்ஏசிசி அதிகாரிகளால் ரொஸ்மா கைது செய்யப்பட்டதை, அதன் துணை ஆணையர், அஸாம் பாக்கி உறுதிபடுத்தினார்.

“நாளை, ரொஸ்மா கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்,” என்றும் மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.

புத்ராஜெயா, எம்ஏசிசி தலைமையகத்திற்கு, காலை 10.40 மணியளவில் தனது வழக்கறிஞர் கே குமரேந்திரனோடு வந்த ரொஸ்மா, 1எம்டிபி ஊழல் தொடர்பாக, கிட்டதட்ட 5 மணி நேர விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 24-ல், ரொஸ்மா மீதான எம்ஏசிசி விசாரணைகள் முடிந்தன, அது தொடர்பான அறிக்கை, அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என அதன் தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல் கூறியிருந்தார்.

கடந்த வாரம், கிட்டதட்ட 13 மணி நேரத்தை, ரொஸ்மா எம்ஏசிசி தலைமையகத்தில் விசாரணைக்காக செலவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் அனுமதி பெற்ற பின்னரே, ரொஸ்மா கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி இன்று மாலை அறிக்கை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து, பணமோசடி எதிர்ப்பு சட்டம், பயங்கரவாத நிதி தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து வருவாய் 2001 சட்டத்தின் கீழ், பல குற்றச்சாட்டுகளை ரொஸ்மா எதிர்கொள்வார்.

“நாளை காலை 8 மணிக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு ரொஸ்மா கொண்டு செல்லப்படுவார்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ரொஸ்மா கைது செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, எம்ஏசிசி ரொஸ்மா மீது சுமத்தவுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என நஜிப் மலேசியாகினி-இடம் சொன்னார்.