கடந்த பொதுத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவினைப் பெற்று ஆட்சியமைத்திருக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கு, அம்னோ – பாரிசானுடன் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க எந்த அவசியமுமில்லை. நாட்டில் 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அம்னோ – பாரிசானை மக்கள் ஒதுக்கித்தள்ள இன – சமய வாதம், ஊழல், பணக் கையாடல் தவிர்த்து மேலும் பல முக்கியக் காரணங்கள் உண்டு என்கிறார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
அவை அனைத்தையும் புறந்தள்ளி அம்னோ – பாரிசானுடன் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வேண்டிய அவசியம் ஏதும் பக்காத்தான் ஹராப்பானுக்கு இல்லை. தற்போதைய அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி தமது கூடாரம் விரைவாகக் காலியாவதைக் கண்டு கதிகலங்கிவிட்டார்.
கட்சித் தலைவர்கள் ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்குச் சட்டப்படியான விசாரணை, தண்டனைகளிலிருந்து தப்பிக்க, அவர் சுயமாகப் போட்டுக் கொள்ள விரும்பும் அரசியல் தற்காப்புக் கவசமே ”பக்காத்தான் ஹராப்பான் அம்னோ – பாரிசானுடன் ஒற்றுமை அரசாங்கம்” என்ற கூற்று என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ-பாரிசான் அடைந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே, கிள்ளான் சுங்கை காண்டிஸ் இடைத்தேர்தலில் கிள்ளான் சுங்கை காண்டிஸ் மக்கள் வழங்கிய மரண அடியின் அதிர்ச்சியிலிருந்து மீளாத அம்னோவும் அதன் தலைவர் ஸாகிட் ஹமிடியும் ஒற்றுமை அரசு குறித்து ஓலமிடுகின்றனர்.
நீண்ட நாள்களுக்கு முன்பே அம்னோ – பாரிசான் அதன் ஆட்சியை இழந்திருக்கும். ஆனால், பண அரசியலும், ஊடகங்களும், மக்களை அடக்கி ஆள அது பயன்படுத்திய கொடுமையான சட்டவிதிகளும் அதற்குக் கைகொடுத்து வந்தன. அன்று மக்களின் கதறலை காதில் வாங்காத பாரிசான் இன்று ஒற்றுமை அரசுக்கு ஓலமிடுகிறது.
அண்டை நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, நாட்டில் விலைவாசி உயர்வு, நம் ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியைக் கண்டுகூட சுதாகரிக்கத் தவறிய மக்களை, தட்டி எழுப்பியது பக்காத்தானின் அயராத உழைப்பு. அம்னோ – பாரிசான் தலைவர்களின் சுயரூபத்தைத் தோல் உரித்துக் காட்டப் பக்காத்தான் ஹராப்பானுக்கு உதவியது மின்னணு ஊடகங்களின் வருகை என்றால் மிகையாகாது.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த உதவிய மக்களுக்கு உண்மையான சேவையை வழங்கவும் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து நடவடிக்களை எடுக்கும். சிற்சில அரசியல் அனுகூலங்களுக்காக, நாட்டையே சீரழித்த அம்னோ – பாரிசானுடன் ஒன்றுபட முடியாது என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.