ரோஸ்மாவுக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு 17 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள கொண்டுவரப்பட்டார்.

நேற்று கைது செய்யப்பட்ட ரோஸ்மா இன்று காலை மணி 7.45 அளவில் எம்எசிசியின் தலைமையகத்திலிருந்து போலீஸ் மற்றும் எம்எசிசி அதிகாரிகள் உடன்வர நீதிமன்றதிற்கு புறப்பட்டார்.

காலை மணி 8.30க்கு செசன்ஸ் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்த ரோஸ்மாவுடன் அவரது வழக்குரைஞர் கே. குமரேந்திரன் இருந்தார்.

செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி-முன் ரோஸ்மா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.

பணச் சலவை சம்பந்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகள் ரோஸ்மாவுக்கு எதிராக சுமத்தப்பட்டன. அக்குற்றச்சாட்டுகளை மறுத்த ரோஸ்மா விசாரணை கோரினார்.

அரசு தரப்பின் முன்நிலை வழக்குரைஞர் ஶ்ரீராம் கோபால் இந்த குற்றச்ச்சாட்டுகளுக்கு பிணை கொடுக்கப்படக் கூடாது. இருந்தாலும் அதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிடுவதாக கூறிய அவர், பிணையை ரிம10 மில்லியனாக நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், ரோஸ்மா அவரது கடப்பிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என்பதோடு அவர் எந்த ஒரு சாட்சியுடனும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றார்.

நீதிபதி அஸுரா அவரது தீர்ப்பில் ரோஸ்மா இரு நபர் ஜாமினுடன் ரிம2 மில்லியன் பிணையம் கட்ட வேண்டும் மற்றும் ரோஸ்மாவின் கடப்பிதழ்களை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளுடன் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் கூறினர்.

ரிம500,000-ஐ இன்று கட்ட வேண்டும். எஞ்சியதை அக்டோபர் 11க்குள் கட்ட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.