நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஈசா அப்துல் சமட், கடந்த பொதுத் தேர்தலின்போது அம்மாநிலத்தில் பல இடங்கள் குறித்து கவலை கொண்டிருந்தார். ஆனாலும், பக்கத்தான் ஹரப்பான் மாநிலத்தைக் கைப்பற்றும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை.
“பிஎன் தோல்வியுறும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் கவலை கொண்டிருந்தது உண்மைதான்.
“வெற்றிபெற மாட்டார்கள் என்று நாங்கள் ஆருடம் கூறிய பல வேட்பாளர்களை நிறுத்தி இருந்தார்கள்- அது எங்களுக்குக் கவலை அளித்தது”, என ஈசா மலேசியாகினியிடம் ஒரு நேர்காணலில் கூறினார். நேர்காணல் போர்ட் டிக்சனில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. போர்ட் டிக்சன் இடைத் தேர்தலுக்காக அந்த இல்லம் தேர்தல் நடவடிக்கை அறையாக செயல்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் முதல்முறையாக நெகிரி செம்பிலானைக் கைப்பற்றியது. அது 36 சட்டமன்ற இடங்களில் 20-ஐ வென்றது.
அம்னோ நெகிரி செம்பிலானை மீண்டும் கைப்பற்ற நினைத்தால் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் கடுமையாக பாடுபட வேண்டும் என்றாரவர்.