சாலைக் (டோல்) கட்டணங்கள் இரத்துச் செய்யப்படுமா என்பது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தெரிந்துவிடும் என்கிறார் பொதுப் பணி அமைச்சர் பாரு பியான்.
பேச்சுகள் தொடர்வதாகக் கூறிய அமைச்சர், எல்லாத் தரப்புகளுக்கும் ஏற்புடைய தீர்வு காணப்படும் என்றும் நம்புகிறார்.
“சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் புதிய அரசாங்கத்துக்கும் நன்மை அளிக்கும் தீர்வு ஒன்றைக் காண இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்”, என்றாரவர்.
பல பரிந்துரைகள் கிடைத்திருப்பதாகவும் பாரு பியான் கூறினார்.
“இரண்டு மூன்று மாதங்களில் ஒரு தீர்வு காணப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்”, என்றார்.
14வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மகாதிர் முகம்மட் ஹரப்பான் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுமையும் டோல் கட்டணம் கட்டம்கட்டமாக அகற்றப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால், நடப்புப் பொருளாதாரச் சூழ்லில் ஹரப்பான் வாக்குறுதி அளித்ததுபோல் ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் டோல் கட்டணத்தை இரத்துச் செய்வது சிரமமான செயல் என்பதைச் சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று பாரு கூறினார்.