தேசநிந்தனைச் சட்டம் பற்றிய கருத்துக்காக துணை உள்துறை அமைச்சரை ராம்கர்பால் கடுமையாகச் சாடினார்

தேசநிந்தனைச் சட்டம் 1948 திருத்தப்படும் அல்லது அகற்றப்படும் வரையில் அது தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று துணை உள்துறை அமைச்சர் முகமட் அசிஸ் ஜம்மான் விடுத்துள்ள அறிக்கை அந்தக் கொடூரச் சட்டத்தை அகற்றுவதற்கான அரசியல் திண்மை அரசாங்கத்திடம் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது என்று ராம்கர்பால் சிங் கூறினார்.

அந்தச் சட்டத்தை எவர் மீதும், அவருடைய அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் சரி, பயன்படுத்தக் கூடது என்ற நோக்கத்தை துணை அமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறிய ராம்கர்பால், பக்கத்தான் ஹரப்பன் அதனுடைய தேர்தல் அறிக்கையில் அச்சட்டத்தை அகற்றுவதற்கு அளித்திருக்கும் வாக்குறுதியைச் சுட்டிக் காட்டினார்.

உண்மையில், உள்துறை அமைச்சு அதற்கான அறிவிப்பை உடனடியாகச் செய்திருக்க வேண்டும். அதன் வழி அரசாங்க வளங்கள் வீணாக்கப்படுவதை தவிர்க்க முடியும்.

தேசநிந்தனைச் சட்டத்தை அகற்றுவது கடினமான ஒன்றல்ல, ஏனென்றால் அதற்கு நாடாளுமன்ற ஆதரவு கிடைக்கும், ஜிஎஸ்டி சட்டத்தை அகற்றுவதற்கு கிடைத்த ஆதரவைப் போல் அவர் மேலும் கூறினார்.

அரசியல் கருத்து வேறுபாட்டை அடக்குவதற்காக பிஎன் அரசாங்கத்தைப் பின்பற்றி ஹரப்பான் அரசாங்கம் அச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றாரவர்.

தம்மை குறைகூறுபவர்களுக்கு எதிராகப் போலீஸ் நடவடிக்கை எடுப்பதை தாம் விரும்பவில்லை என்று பிரதமர் மகாதிர் கூறியிருப்பதைக் குறிப்பிட்ட ராம்கர்பால், துணை அமைச்சர் அசிஸ் அச்சட்டத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும், மாறாக அச்சட்டம் பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து தற்காக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

‘தேர்தல் அறிக்கையைப் படியுங்கள்’

இதனிடையே, பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரனும் துணை அமைச்சர் அசிஸ் அளித்துள்ள விளக்கத்தைக் குறைகூறினார்.

“இந்த மாதிரியான ஆள் இப்படிச் சொன்னால், இவர் துணை அமைச்சராக இருக்க அருகதை அற்றவர்! போலீஸ் செயல் நடைமுறை பற்றி பேசுவது முட்டாள்தனமனது.

“அவர் பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் அறிக்கை நகலைப் பெற்று படிக்க வேண்டும்”, என்று சுரேந்திரன் டிவிட் செய்துள்ளார்.

தேசநிந்தனைச் சட்டம் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதால், போலீஸ் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மானின் சகோதரர் அஸ்மான் நூரை கைது செய்திருப்பதாக துணை அமைச்சர் அசிஸ் இன்று முன்நேரத்தில் கூறினார்,

போலீசார் நடைமுறையைப் பின்பற்றினர் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) பூசி ஹருண் தம்மிடம் கூறியதாக அசிஸ் தெரிவித்தார்.

பிரதமர் மகாதிரை குறைகூறி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்ததற்காக அஸ்மான் கைது செய்யப்பட்டார்.

குறைகூறுபவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தும்படி மகாதிர் போலீசாரை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.