ஆறு பொதுப் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமைக் கடிதங்களைப் பெற்றதை அடுத்து நாட்டில் உள்ள 20 பொதுப் பல்கலைக்கழகங்களும் தன்னாட்சி உரிமை பெற்ற பல்கலைக்கழகங்களாக விளங்குகின்றன.
தன்னாட்சி உரிமை பல்கலைக்கழகங்களுக்கு அவற்றின் இயக்குனர் வாரியமும் பல்கலைக்கழக ஆளுநர்கள் வாரியமும் சொந்தமாக முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதாகக் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
“தன்னாட்சி வழங்குவது பல்கலைக்கழகங்கள் சிறப்பான நிலையை அடையவும் உலகத் தரத்தை எட்டவும் வழிகோலும்”, என்று அந்த அறிக்கை கூறிற்று.
தன்னாட்சி உரிமை என்றாலும் அது முழு தன்னாட்சி உரிமை அல்ல. பல்கலைக்கழகங்கள் உயர்க் கல்விமீதான அரசாங்கம் மற்றும் அமைச்சின் கொள்கைகளுக்கும் வியூகங்களுக்கும் ஏற்பத்தான் செயல்பட வேண்டும்.
பல்கலைக்கழகத் தன்னாட்சித் திட்டம் 2012-இலேயே அறிமுகப்படுத்தப்பட்டுக் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 14 பொதுப் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமையைப் பெற்றுவிட்டன.