மலாய்க்காரர்கள் மீண்டும் அம்னோவுக்கு ஆதரவு கொடுப்பார்கள்- இஸ்மாயில் சப்ரி

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்திடம் மலாய்க்காரர்களுக்கு உதவும் கொள்கைகள் கிடையாது என்பதால் மலாய்க்காரர்கள் மீண்டும் அம்னோவை ஆதரிக்கும் நிலை வரும் என்கிறார் அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப்.

ஹரப்பான் அரசாங்கம் மலாய்க்காரர்களை ஒடுக்கும் கொள்கைகளைப் பின்பற்றுவதாக இஸ்மாயில் நேற்றிரவு அம்னோ ஆன்லைனில் ஒளிபரப்பான ஒரு விவாதத்தில் கூறினார்.

“கூட்டரசு அரசமைப்பில் பிரிவு 153 இனியும் தேவையில்லை என்று எண்ணும் மலாய் இளைஞர்கள் நாட்டின் அரசியல் நடப்புகளை முதிர்ச்சியுடனும் நியாயமாகவும் மதிப்பிட வேண்டும்.

அரசியலில் மற்ற இனங்களின் கை மேலோங்கும் நிலை வந்துவிடலாம் என்று இஸ்மாயில் “எச்சரித்தார்”.

“தங்களை ‘இரண்டாம் தரக் குடிமக்கள்’ என்று கூறிக்கொள்ளும் மற்ற இனத்தவர் நாட்டின் பொருளாதாரத்தைத் தங்கள் பிடியில் வைத்திருப்பது எப்படி? இரண்டாம் தரக் குடிமக்கள் பொருளாதாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் நிலை உலகில் வேறு எங்காவது உண்டா? இப்போது அரசியலையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.

“பயமுறுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை. நம் உரிமைகள் நம்முடையவை மட்டுமே. அவற்றை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. நம் உரிமைகளைத்தான் பயன்படுத்துகிறோம். மற்ற இனங்களின் உரிமைகளைப் பறித்துக் கொள்ளவில்லை. நம் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதை வைத்து நம்மை யாரும் இனவாதிகள் என்று கூற முடியாது”, என்றாரவர்.