டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், மோராய்ஸ் மற்றும் அல்தாந்துயா படுகொலை மர்மத்தை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
சில கொலை வழக்குகள், தீர்க்கப்படாத விஷயங்களை காட்டுவதாகவும் மர்மம் நிறைந்ததாகவும் இருப்பதாக இஸ்கந்தார் புத்ரி எம்பி-யுமான கிட் சியாங் தெரிவித்தார்.
“1எம்டிபி விசாரணை தொடர்பான மர்ம மரணங்கள், எம்பேங்க் தோற்றுநர் படுகொலை, மங்கோலிய அழகி அல்தாந்துயா படுகொலை, டிஏபி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் தியோ பெங் ஹோக் மரணம் போன்றவை இன்னும் கேள்விகுறிகளாகவே உள்ளன,” என இன்று ஓர் அறிக்கையில் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மோராய்ஸ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர், குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தி, தனக்கு சிறைச்சாலை அதிகாரியின் வழி, முன்னாள் பிரதமர் நஜிப் இராசாக் RM3.5 மில்லியன் வழங்கினார் என நீதிமன்றத்தில் கூறிய பின்னர், அவ்வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து, அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிடும்படி நஜிப் எஸ் ரவி சந்திரனைக் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையேல், பொய் குற்றச்சாட்டை எதிர்நோக்கவேண்டி வருமென்றும் நஜிப் எச்சரித்துள்ளார்.
கடந்த 2015, செப்டம்பர் 4-ம் தேதி, கடத்தப்பட்ட மோராய்ஸ், பிறகு ஒரு சிமெண்ட் ட்ரம்மில் பிணமாக மீட்கப்பட்டார். மோராய்ஸ் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் உள்ளனர்.
2007-ம் ஆண்டு அல்தாந்துயாவும், 2013-ம் ஆண்டு ஹுஸ்சாய்னும் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட போதும், கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாமலேயே இருக்கிறது.
2009-ம் ஆண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்தில், விசாரணையின் போது தியோ இறந்துபோனார். அரச விசாரணை ஆணைக்குழு, தியோ தற்கொலை செய்துகொண்டார் என முடிவு செய்தபோதும், தியோவின் குடும்பத்தார் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவே கூறி வருகின்றனர்.