நடப்பிலுள்ள சட்டங்கள் தேர்தல் ஆணையத்தை கிட்டத்தட்ட அதிகாரமற்ற அமைப்பாக ஆக்கிவிட்டன என்று அந்த ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அஸ்ஹார் ஹருண் கூறுகிறார்.
நடப்பிலுள்ள தேர்தல் சட்டங்களின் கீழ் எந்த ஒரு தேர்தல் குற்றத்தையும் விசாரிக்க அல்லது வழக்குத் தொடர தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை.
உண்மையில், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக எந்த ஒரு வேட்பாளரையோ கட்சியையோ தண்டிக்கும் அல்லது விசாரிக்கும் அதிகாரம் கிடையாது என்று அஸ்ஹார் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
மாறாக, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தற்போது போலீஸ், எம்எசிசி மற்றும் மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் ஆகியவற்றிடம் விடப்பட்டுள்ளது என்றாரவர்.
இருப்பினும், தேர்தல் ஆணையம் ஒரு தேர்தல் பரப்புரை அமலாக்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் அக்குழுவின் உறுப்பினர்கள் அவர்களே கண்ட குற்றங்கள் பற்றி மட்டுமே எடுத்துரைக்க முடியும் என்று அஸ்ஹார் மேலும் கூறினார்.
ஆகவே, தனிப்பட்டவர்கள், அரசுசார்பற்ற அமைப்புகள் மற்றும் தேர்தல் குற்றங்கள் பற்றிய தகவல் உடையவர்கள் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அவரது போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பரப்புரையில் அரசாங்க இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள வேளையில், தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸ்ஹாரின் அறிக்கை வெளிவந்துள்ளது.
இராணுவப் படை வாக்காளர்களிடையே நடத்திய பரப்புரையின் போது அன்வார் இராணுவப் படையின் வசதிகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டும் அதில் அடங்கும்.
இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அன்வார், தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இராணுவத் தளங்களுக்குச் சென்றதாக கூறிக்கொண்டார்.