தேர்தல் ஆணையத்தின் (எஸ்பிஆர்) புதியத் தலைவராக, அஸார் ஹரூன் தேர்ந்தெடுக்கப்பட்டதை, மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாக்காம்) வரவேற்றுள்ளது.
அதேசமயம், அந்நியமனம் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கைக்கு முரணாக அமைந்துள்ளதாக, சுஹாக்காம் தலைவர் ரஸாலி இஸ்மாயில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய, நாடாளுமன்றத்தின் மூலமாக அப்பதவி நியமனம் அமைய வேண்டுமெனும் ஹராப்பான் தேர்தல் அறிக்கைக்கு முரணாக, அஸாரின் நியமனம் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டியது சுஹாக்காமின் கடமை,” என இன்று ஓர் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
அஸாரின் நியமனத்தை நியாயப்படுத்தும் சிலர், முக்கிய அரசு நிறுவனங்களின் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மூலம் நியமிக்கப்பட வேண்டும் எனும் ஹராப்பானின் திட்டத்தை, அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யாதவரை பின்பற்ற முடியாது எனக் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், தேர்தல் செயல்பாட்டின் நேர்மை மற்றும் அந்நிறுவனத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் சுஹாக்காம் எஸ்பிஆர்-க்கு உதவத் தயாராக உள்ளதாக ரஸாலி தெரிவித்தார்.