பிடி-யில் 4,000 பேருக்கு இலவச விருந்து, கலக்கத்தில் லுக்குட் பிரதிநிதி

 

போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் வாக்களிப்பு நாளுக்கு முந்திய இரு இரவுகளில் 3,000 லிருந்து 4,000 பேர்களுக்கு லுக்குட்டில் இலவச விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உள்ளூர் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வாக்குகளைக் கவர்வதற்காக இது போன்ற இலவச விருந்துகள் அளிப்பது புதிய மலேசியாவுக்கு நல்லதோர் முறையல்ல என்று லுக்குட் சட்டமன்ற உறுப்பினர் சூ கென் ஹவா மலேசியாகினியிடம் கூறினார்.

இம்மாதிரியான செயல்களால் ஆளுங்கட்சி தானாகவே பிஎன் 2.0 அல்லது அம்னோ 2.0 ஆக மாறிவிடக்கூடும் என்று அந்த டிஎபி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

நாங்கள் அன்வார் இப்ராகிம்மை போர்ட்டிக்சன் வேட்பாளராக ஆதரிக்கிறோம். ஆனால் வாக்குகளைப் பெறுவதற்காக இலவச விருந்தோம்பல்கள் நடத்துவது எங்களுக்கு ஏற்புடைதல்ல என்றாரவர்.

இதற்கு ஏற்பாடு செய்பவர்கள் தங்களை ‘போர்ட்டிக்சன் வாக்காளர்கள் குழுவினர்” என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அன்வாரின் ஆதரவாளர்களான வெளியூர் வாசிகள் என்று தாம் சந்தேகிப்பதாக சூ கூறினார்.

அன்வாருக்கு உதவுவதற்கு வேறு நல்ல வழிகள் இருக்கின்றன. அவரின் ஆதரவாளர்கள் பணத்தை நாட்டை காப்பாற்றுவதற்காக நன்கொடையாக அரசாங்கத்திடம் அளிக்கலாம் அல்லது அனாதை இல்லங்களுக்கு வழங்கலாம் என்றாரவர்.

அன்வார் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா என்பது தமக்குத் தெரியாது என்று அவர் மேலும் கூறினார்.

இது சூவின் சொந்தக் கருத்து. அதைக் கூறும் உரிமை அவருக்கு உண்டு என்று தொடர்பு கொண்ட போது பிகேஆரின் தொடர்புகள் பிரிவு இயக்குனர் பஹாமி பாட்ஸில் கூறினார்.

இந்த நிகழ்ச்சி அழைப்பின் பேரில் நடத்தப்படுகிறது. அன்வார் அதில் பங்கேற்றால் பிரச்சனை ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.