தீயொழுக்கத்தைத் தடுக்க வேண்டும் என்ற பெயரில் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கள்ளத்தனமாய்ப் பார்க்க இஸ்லாம் அதன் ஆரதவாளர்களுக்குப் போதிக்கவில்லை என்று பிரதமர் மகாதிர் இன்று கூறினார்.
நம்மிடம் மற்றொருவர் புரியும் குற்றச்செயலைப் போய் தேடிப்பார்க்க இஸ்லாம் சொல்லவில்லை. நீங்கள் ஒருவரின் வீட்டிற்குள் ஏறி நுழைய வேண்டும் என்றால், அது இஸ்லாம் அல்ல என்று கோலாலம்பூரில் ஒரு மாநாட்டில் உரையாற்றிய பின்னர் மகாதிர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சமய அதிகாரிகள் கல்வாட் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக திடீர் சோதணைகள் நடத்தப்படுவது முடிவுக்கு வரும் என்று இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் முஜாஹிட் யுசோப் ராவா த ஸ்டார் நாளிதழுக்கு அளித்திருந்த நேர்காணலில் கூறியிருந்தது பற்றிய கேள்விக்கு மகாதிர் மேற்கண்டவாறு கூறினார்.
“இஸ்லாம் ஓர் இரக்கமற்ற சமயமல்ல. அது தலை மற்றும் கைகள் ஆகியவற்றை வெட்டுவது பற்றியதல்ல. அது அதைப் பற்றியதல்ல.
“பலவிதமான கடுமையாயிராத தண்டனைகள் இருக்கின்றன, ஆனால் இவர்கள் மக்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்புகிறார்கள், மக்களின் கைகளையும் தலையையும் வெட்டுகிறார்கள். அது இஸ்லாம் அல்ல”, என்று மகாதிர் வலியுறுத்தினார்.
மற்றொருவரின் உயிரைப் பறிப்பதையும் இஸ்லாம் நிராகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
“நீ கொலை செய்தால், நீ பாவத்திற்கு உள்ளாகுவாய்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.