நஜிப் அப்துல் ரசாக் பக்கத்தான் ஹரப்பான் அரசு “விடாப்பிடியாக நிலைகெட்டு” நடந்துகொள்வதாக மீண்டும் சாடியுள்ளார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல விவகாரங்களில் அது “முன்பின் முரணான” முடிவுகள்” எடுத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஃபோரெஸ்ட் சிட்டி சொத்துகளை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்தல், வெளிநாட்டுச் சமையல்காரர்கள், தொழிலாளர்களை வேலைக்கு அமர்துதல், பிடிபிடிஎன் கடன்கள், கிழக்குக் கரை இரயில் தொடர்பு (இசிஆர்எல்) போன்ற விவகாரங்களில் முதலில் ஒன்று சொல்வது பிறகு சொன்னதை மாற்றிக் கொள்வது என்ற ரீதியில் அது நடந்து கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் கூறினார்.
“எடுத்துக்காட்டுக்கு, வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் மலேசியாவில் எல்லாத் தொழில் துறைகளிலும் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தும் விவகாரமாகும். முதலில் அரசாங்கம் வெளிநாட்டுச் சமையல்காரர்களுக்குத் தடை என்று அறிவித்தது. ஒரு நாள்கூட ஆகவில்லை. அமைச்சர் கூறினார் அது ஒரு பரிந்துரைதான் என்று.
“இசிஆர்எல் போன்ற திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் நினைவிருக்கிறதா? ‘இரத்துச் செய்யப் போகிறோம்’, இல்லை, இல்லை, பரிசீலிக்கிறோம்’ ‘முடிவு காணப்பட்டது, அதை ஒத்தி வைக்கிறோம்’ ‘ஒத்தி வைக்கவில்லை, தொடரப் பொகிறோம்- இப்படி ஒரே கலவை மயமான அறிக்கைகள்”, என்று நஜிப் நேற்றிரவு அவரது முகநூல் பக்கத்தில் கூறி இருந்தார்.
வெளிநாட்டவருக்கு ஃபோரெஸ்ட் சிட்டி சொத்துகள் விற்கப்பட மாட்டா என்று முதலில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அறிவித்திருந்தார்.
மறுநாளே புத்ரா ஜெயா, விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டிருக்கும் பட்சத்தில் வெளிநாட்டவர் சொத்து வாங்குவதற்குத் தடையில்லை என்று விளக்கமளித்தது.
இதில் நிதி அமைச்சர் லிம் குவான் எங்தான் “நிலை தடுமாறும் அரசாங்கத்தின் மன்னர்” என்றும் நஜிப் குறிப்பிட்டார். விற்பனை, சேவை வரி விசயத்திலும் அந்நிய தொழிலாளர்களுக்கான லெவி விசயத்திலும் அவர் நடந்துகொண்ட முறையை வைத்து அப்படிக் கூறினார்.
“நம்முடைய நிதி அமைச்சர் அண்மையில் லெவி தொகையை அந்நிய தொழிலாளர்கள்தான் செலுத்த வேண்டும் என்றார்.
“மறுநாளே பழையபடி முதலாளிகளே செலுத்துவார்கள் என்றார்”, என நஜிப் முகநூலில் குறிப்பிடிருந்தார்.
முடிவெடுப்பதில் உறுதியற்ற இந்தப் போக்கால் குத்தகையாளர்களும் மேம்பாட்டாளர்களும், பொதுமக்களும் செய்வதறியாது திகைக்கிறார்கள், தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர், அந்நிய முதலீட்டாளர்களும் நடப்பு அரசின்மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என நஜிப் கூறினார்.