பொன்னாடையும் வேண்டாம் பூமாலையும் வேண்டாம், வேதமூர்த்தி

“இலக்கு வைத்துள்ள குறிக்கோளை எட்டும்வரை என் தோள்கள் பொன்னாடையை அணியாது; என் கழுத்தும் மலர் மாலையை சுமக்காது” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, தன்னைச் சந்திக்க வரும் அன்பர்களை கனிவுடன் மறுதலிக்கும்போது, மாலையோடும் பொன்னாடை-யைத் தாங்கிய தாம்பூலத்தோடும் வரும் அன்பர்கள் எப்படி வியப்புடன் உணர்கின்றனரோ, அதைப்போன்ற அனுபவம், மலேசிய தெலுங்க சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் அட்சயக்குமாருக்கும் இன்று(அக்.07) ஞாயிற்றுக் கிழமை ராவாங் அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலய மண்டகத்தில் ஏற்பட்டது.

எழுச்சியோடும் கூட்டு முயற்சியோடும் முன்னேறி வரும் மலேசியத் தெலுங்கு சங்கத்தின் 42-ஆவது தேசியப் பேராளர் மாநாடு ராவாங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான வேதமூர்த்தி, சுதந்திரத்திற்குப் பின் நாடு அடைந்துள்ள தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, கல்வி மறுமலர்ச்சிக்கு ஏற்ப இந்திய சமுதாயமும் மேம்பாடு காணவில்லை; தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சில தரப்பினர் முன்னேறியதை வைத்து, சமுதாயமே வளர்ச்சி அடைந்து விட்டதாக கருத முடியாது. இவை யாவும் சீர் செய்யப்படும்வரை மலர் மாலை, பொன்னாடை போன்ற சம்பிரதாய சிறப்புகளை நான் ஏற்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன்.

அதன் அடிப்படையில்தான் மலேசிய தெலுங்கு சங்க தேசிய நிருவாகக் குழு சார்பில் அளிக்கப்பட்ட சம்பிரதாய மரியாதையை இங்கே நான் மறுக்க நேர்ந்தது என்பதை இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிற தெலுங்குப் பெருமக்கள், தெலுங்கு சங்க தேசிய மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசிய தெலுங்கு மக்கள் தங்களின் தாய்மொழியைக் கற்பது-வளர்ப்பது; மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்பது, கலாச்சார-பண்பாட்டுக் கூறுகளைக் கட்டிக் காப்பது; தெலுங்கு மக்களிடையே ஒற்றுமையைப் பேணுவது உள்ளிட்ட குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு செம்மையாக செயல்படும் மலேசிய தெலுங்கு சங்கத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் நிதி அளிக்கப்படும். தற்பொழுது, செடிக் அமைப்பு புதுப்பாங்குடன் புதிய பாதையில் புதுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதற்கான வல்லுநர்களை அடையாளம் கண்டுள்ளோம். அரசியல் கலப்பற்று சமூக நோக்குடன் அவர்கள் விரைவில் செயல்பட உள்ளனர். அந்த நேரத்தில் மலேசிய தெலுங்கு சங்கத்திற்கு உரிய நிதி கண்டிப்பாக வழங்கப்படும் என்று தெலுங்கு சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் அட்சயக் குமார் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உறுதி அளிப்பதாகவும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

– நக்கீரன்