வருமானத்தைப் பெருக்கப் புது வரிகளைக் கொண்டுவரலாமா என்று அரசாங்கம் ஆலோசிக்கிறது.
இதைத் தெரிவித்த பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், முந்தைய அரசாங்கம் வைத்துச் சென்றுள்ள தேசியக் கடனைக் குறைக்க அது ஒரு வழி என்றார்.
“அது வேறு வகை வரி, அது (மறைமுகமாக) மக்களின் சுமையைக் குறைக்கும்.
“அரசாங்கக் கடன்களைக் குறைப்பதுதான் அதன் நோக்கம்”. மகாதிர் இன்று காலை “மலேசியா- ஒரு புதிய விடியல்” என்னும் கருத்தரங்கைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக அவரது உரையில் மகாதிர், கடன்களைக் குறைப்பதற்கு அரசாங்க நிலங்களை அல்லது மற்ற சொத்துகளை விற்பது பற்றியும் ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்தார்.
“முந்திய அரசாங்கம் வெளிநாட்டவருக்கு நிறைய நிலங்களை விற்றது. அது நமக்கு நல்லதல்ல. ஆனால், நிலங்களை உள்நாட்டவருக்கு விற்கலாம்”, என்றாரவர்.
இந்த வகையில் பெறப்படும் வருமானம் அரசாங்கக் கடன்களைக் குறைக்கவும் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடவும் உதவும் என மகாதிர் கூறினார்.