கஞ்சா புற்று நோய்க்கு மருந்தா? ஆதாரமில்லை என்கிறார் துணை அமைச்சர்

கஞ்சாவில் மருத்துவத்தன்மை இருப்பதாகவும் அது புற்று நோய்க்கும் மற்ற நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படும் என்றும் கூறப்படுவதைச் சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை மறுத்தார்.

“புற்று நோயையும் மற்ற நோய்களையும் கஞ்சா குணப்படுத்தும் என்பதற்கு ஆதாரமில்லை என்பது (சுகாதார அமைச்சுக்குத்) தெரியும்.

“கஞ்சா நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக இந்நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்”, என்றவர் இன்று கோலாலும்பூரில் கூறினார்.

கஞ்சா வைத்திருந்த குற்றத்துக்காக முகம்மட் லுக்மான் முகம்மட்டுக்கு ,29, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து கஞ்சாவில் உள்ள மருத்துவத்தன்மை ஆராயப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

லுக்மான் ஆதரவாளர்கள் அவர் கஞ்சாவைக் கொண்டு நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வந்ததாக கூறிக்கொள்கிறார்கள். அதைக் கருத்தில்கொண்டு அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசாங்க எம்பிகளும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தண்டனை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் லுக்மானின் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.