மேலும் விசாரிக்கப்படுவதற்காக ஸாகிட் எம்எசிசிக்கு வந்தார்

 

மூன்றாவது முறையாக மேலும் விசாரிக்கப்படுவதற்காக அம்னோ தலைவர் அஹமட் ஹாசிட் ஹமிடி மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) இன்று வந்தார்.

காலை மணி 9.20 அளவில் அங்கு வந்த நேர்ந்த அவரை பத்து நிமிடங்களுக்குப் பின்னர் எம்எசிசி அதிகாரிகள் உள்ளே அழைத்துச் சென்றனர்.

யாயாசான் அகல் பூடி அறவாரியத்தின் நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதற்காக ஸாகிட் மீது நடந்து கொண்டிருக்கும் எம்எசிசி விசாரணை தொடரும் என்று எம்எசிசியின் துணை ஆணையர் (நடவடிக்கை) அஸாம் பாக்கி கூறினார். அவர் வேறு தகவல் ஏது அளிக்கவில்லை.

ஸாகிட்டை கைது செய்வதற்கு அல்லது குற்றம் சாட்டுவதற்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று ஓர் உயர்மட்ட எம்எசிசி அதிகாரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஜூலை 2-இல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ரிம2.6 மில்லியனை சவூதி அரேபிய அரச குடும்ப உறுப்பினர் செலுத்தியதாக கூறப்படுவது பற்றி ஸாகிட் விசாரிக்கப்பட்டார்.

ஜூலை 3-இல், யாயாசான் அகல் பூடி அறவாரியத்தில் நிதி கையாளப்பட்டது பற்றி ஸாகிட்டின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.