மகாதிர்: சில சட்டங்கள் நியாயமற்றவை, ஆனால் சட்டமாக இருக்கும் வரையில் நிலைநிறுத்தப்பட வேண்டும்

 

சில சட்டங்கள் நியாயமற்றதாக இருக்கலாம், அவை திருத்தப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மகாதிர், அவை சட்டப் புத்தகத்தில் இருக்கும் வரையில் அச்சட்டங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றார்.

சட்டம் மக்களுக்கு, அரச குடும்பத்திற்கு மற்றும் அரசாங்கத்திற்கு நியாயமானதாக இருக்க வேண்டும் – ஆனால், நியாயமற்ற சட்டங்கள் இன்னும் இருந்து வருகின்றன. அச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் பெரும் குழப்பம் மற்றும் கொடுமைப்படுத்தல் ஆகியவை ஏற்படும் என்று அவர் கூறினார்.

அதனால்தான் சட்டங்கள் நியாயமானவையா என்பதை நிர்ணயிப்பதற்கு அவற்றை புனராய்வு செய்தாக வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்,

“மக்களின், அரசாங்கத்தின் மற்றும் அரச குடும்பத்தின் உரிமைகளை உண்மையிலேயே பாதுகாக்கும் சட்டங்கள் மட்டுமே தொடர்ந்து நிலைநிறுத்தப்படலாம்…ஆள்பவர்கள் மற்று அரசாங்க அதிகாரிகள் என்ற முறையில் நாம் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். ஒரு சட்டம் நல்லதல்ல என்றால், அதை திருத்தும் அல்லது அகற்றும் உரிமை நமக்கு உண்டு.

“ஆனால், சட்டம் அமலில் இருக்கும் வரையில், நாம் அச்சட்டத்திற்கு கீழ்படிய வேண்டும். சட்டத்தை மேம்படுத்த சில வழிகள் இருக்கின்றன, ஆனால் சட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கும் மற்ற எவருக்கும் எதிராக அதிகாரத்தையும் வன்முறையையும் பயன்படுத்தும் உரிமை எந்தத் தரப்பினருக்கும் கிடையாது.

“இதுதான் ஜனநாயகம் என்பதற்கு அர்த்தம் அளிக்கிறது”, என்று மகாதிர் கூறினார்.

கடந்த காலத்தில் சட்டங்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் இது புதிய நிர்வாகத்தின் கீழ் நடக்கக்கூடாது என்றாரவர்.

இன்று காலை, பிரதமர் துறையின் பணியாளர்களிடம் பேசிய பிரதமர் மகாதிர், சட்ட ஆளுமை நிலைநிறுத்தப்படுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் நீதிபரிபாலன துறைக்கான நியமனங்கள் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் அந்த நியமனங்கள் பேரரசரிடம் அளிக்கப்படும் என்று மகாதிர் மேலும் கூறினார்.