மே 9 பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் பதவி தம்மைத் தேடி வந்ததாக துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
நேற்றிரவு ஜாகார்த்தாவில் அங்கு வாழும் சுமார் 200 மலேசியர்கள் அடங்கிய கூட்டத்தில் வான் அசிசா அந்தத் தகவலை முதன்முதலாகத் தெரிவித்தார். பிகேஆர் சின்னத்தில் ஹரப்பான் கட்சிகள் போட்டியிட்டதால் அக்கட்சித் தலைவர் என்ற முறையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் தமக்குப் பிரதமர் பதவியை அளிக்க முன்வந்ததாக அவர் சொன்னார்.
“நான் அதை ஏற்கவில்லை, ஏனென்றால் (தேர்தலில் வென்றால்) டாக்டர் மகாதிர் முகம்மட்தான் பிரதமர், நான் துணைப் பிரதமர் என்று மக்களிடம் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தோம்”, என்று ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் நடந்த நிகழ்வில் அவர் கூறினார்.