அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதை இடைக்காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போர் வரிசையில் டிஏபி இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங்கும் சேர்ந்து கொண்டிருக்கிறார்.
போலீஸ் அரசு-ஆதரவு சமூக ஆர்வலர்கள்மீதும் எதிரணி உறுப்பினர்கள்மீதும் தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“அடக்குமுறைச் சட்டங்களையும் ஜனநாயகத்துக்கு ஒவ்வாத சட்டங்களையும் இரத்துச் செய்வதாக பக்கத்தான் ஹரப்பான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற சிறிது காலம் பிடிக்கும் . அதற்கிடையில் அடக்குமுறைச் சட்டங்களின்கீழ்க் குற்றம் சாட்டுவதை இடைக்காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம் என்ற தேசிய மனித உரிமைக் கழக(ஹகாம்)த் தலைவர் குர்தயால் சிங் நிஜாரின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்”, என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“அதுபோன்ற சட்டங்களை அகற்ற முடியாதபடி பல தடைகள் உள்ளன”, என்றாரவர்.
அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, பொய்ச் செய்தி- தடுப்புச் சட்டம் ஹரப்பான் கட்டுப்பாட்டில் உள்ள மக்களவையில் நிறைவேற்றப்பட்டு எதிரணியில் கட்டுப்பாட்டில் உள்ள செனட்டில் நிராகரிகக்ப்பட்ட சம்பவத்தை லிம் சுட்டிக்காட்டினார்.