சொத்துகளை விற்பதென்றால் வேகமாக செயல்படுவாராம் நிதி அமைச்சர் லிம் குவான் எங். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிண்டலடித்துள்ளார்.
ஆனாலும், டிஏபி தலைமைச் செயலாளரான குவான் எங்கிடம் சொத்துகளை விற்பதில் “கெட்டிக்காரத்தனம் இல்லை” என்று நஜிப் குறிப்பிட்டார்.
“லிம் பினாங்கு முதலமைச்சராக இருந்தபோது ஒவ்வோராண்டும் உபரி பட்ஜெட்டைக் காண்பிக்க அரசாங்க நிலங்களையும் நில உரிமையையும் பங்குகளையும் விற்றார். ஆனாலும் அவர் இருந்த பத்தாண்டுக் காலத்தில் மாநில அரசின் செலவுகள் அதிகரித்துக் கொண்டுதான் வந்தன.
“சொத்து விற்பனையில் அவர் ஒன்றும் கெட்டிக்காரர் அல்ல”, என நஜிப் அவருடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் நிதி அமைச்சருமான நஜிப், அரசாங்க நிலங்கள், சொத்துகள், கஜானா நேசனல் மற்றும் பெர்மோடலான் நேசனல் பெர்ஹாட்டின் சொத்துகள் அகியவற்றை விற்பதற்கு புத்ரா ஜெயா திட்டமிட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.
தமது நிர்வாகம் விட்டுச் சென்ற தேசிய கடனைச் செலுத்தி முடிக்கவே இந்த விற்பனை என்று அரசாங்கம் “காரணம் கூறுவதை” நஜிப் ஒப்புக்கொள்ளவில்லை. அரசாங்கம் எதிர்நோக்கும் நிதிப் பிரச்னைகளுக்கு அதன் ஜனரஞ்சக திட்டங்களே காரணம் என்றாரவர்.
மேலும், தேசிய கடன் ரிம1ட்ரில்லியன் என்பதையும் அவர் மறுத்தார்.