அம்னோ லாபுவான் எம்பி விலகப் போவதாக வதந்தி

 

அஸ்ட்ரோ அவானி அறிக்கையின்படி, அம்னோவின் லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்மான் இஸ்லி அக்கட்சியிலிருந்து நாளை விலகப் போகிறார்.

அந்த அறிக்கையின்படி ரோஸ்மான் பார்டி வாரிசான் சாபாவில் இணையக்கூடும்.

இதை ரோஸ்மான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ஆனால் தாம் ஏராளமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றார்.

நாளை நான் ஓர் அறிக்கை வெளியிடுகிறேன். அது இப்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த அறிக்கையில் பல விவரங்கள் இருக்கும் என்று அவர் கூறினார்.

ரோஸ்மான் விலகிக் கொண்டால், அவர் அம்னோவிலிருந்து விலகும் ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினராவார்.

ரோஸ்மான் விலகிக் கொண்டால், 48 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மக்களவையில் மிகப் பெரிய கட்சி என்ற தகுதியை அம்னோ இழக்கும்.

தற்போது, மக்களவையில் அம்னோவும் பிகேஆரும் ஒவ்வொன்றும் 49 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சமநிலையில் இருக்கின்றன.

தொடக்கத்தில் பிகேஆருக்கு 50 இருக்கைகள் இருந்தன. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்காக பிடி நாடாளுமன்ற இருக்கை காலி செய்யப்பட்டதால் அதன் மொத்த இருக்கை 49-க்கு குறைந்தது.

பிடி இடைத் தேர்தலில் அன்வார் வெற்றி பெற்றால், நாடாளுமன்றத்தில் பிகேஆரின் இருக்கை மீண்டும் 50-க்கு உயரும்.

ரோஸ்மான் அவரது உறுப்பியம் பாரத்தை வார்சானின் துணைத் தலைவர் டாரெல் லெய்கிங்கிடம் நாளை தாக்கல் செய்வார் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.