இந்திய சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (செடிக்) புதிய தலைமை இயக்குநராக எஸ்.இலட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நியமனம் அக்.12-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறதென்றும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.
தற்பொழுது தகவல்-பல்லூடக அமைச்சின் பன்னாட்டுப் பிரிவில் செயலாளராக இருக்கும் இலட்சுமணன், நிருவாக மற்றும் அரசதந்திர சேவையில் நீண்ட அனுபவம் பெற்றவர்; அத்துடன், 1989 முதல் பொதுச் சேவைத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்பட செயல்பட்டவர்.
இந்த வேளையில், மீண்டும் கல்வித் துறைக்குத் திரும்பும் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், கடந்த ஆறரை ஆண்டு காலமாக செடிக் அமைப்பை திறம்பட நடத்தியதுடன் இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைக்காக நன்றி தெரிவிப்பதாக தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
செடிக் அமைப்பை வழிநடத்தவுள்ள புதுக்குழுவினர், இந்திய சமுதாய மேம்-பாட்டையும் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்-பட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் இலக்காகக் கொண்டு செயல்படுவர்.
கல்வி மறுமலர்ச்சி, வலிமையான இளைய சமுதாயம், பொருளாதார உயர்வு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மலேசிய இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக செடிக்-இன் புதிய குழுவினர் பாடுபடுவர்.
அரசு நிதியைக் கொண்டு செடிக் நிறைவேற்றும் திட்டங்கள், அவற்றின் பலன், பின்விளைவு குறித்தெல்லாம் கண்காணிக்கப்படும் அதேவேளை, இந்திய சமுதாய மேம்பாட்டை இலக்காகக் கொண்டுள்ள நம்பிக்கை கூட்டணி அரசின் எண்ணம் ஈடேறுவதும் உறுதிசெய்யப்படும் என்று பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
- நக்கீரன்