சில ஆட்சியாளர்கள் மகாதிர் பிரதமராவதைத் தடுக்க முயன்றார்களாம்

துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் பிரதமர் பதவியைத் தமக்குக் கொடுக்க முன்வந்த தகவலை வெளியிட்டதற்காக டாக்டர் மகாதிர் முகட்டின் ஊடக, தொடர்பு ஆலோசகர் காடிர் ஜாசின் அவரைப் பாராட்டினார்.

“மகாதிர் மீண்டும் அரசியல் களத்துக்குத் திரும்புவதைத் தடுக்க சில ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயன்றார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

“என்ன நடந்தது என்பதைக் விவரித்தற்காக வான் அசிசாவைப் பாராட்டுகிறேன். அது, 2018 மே 9இலும் 10-இலும் என்ன நடந்திருக்கலாம் என்ற பலருடைய அனுமானங்களை உறுதிப்படுத்தியுள்ளது”, என காடிர் தம்முடைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு வலைப்பதிவர் என்ற முறையில்தான் பதிவிடுவதாகவும் மகாதிரின் உதவியாளர் என்ற முறையில் அல்ல என்ற குறிப்பையும் அவர் சேர்த்துக் கொண்டிருந்தார்.

மகாதிர்,93, மலேசியப் பிரதமராக மே 10-இல் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

காடிர் விவரமாக எதையும் குறிப்பிடவில்லை. என்றாலும் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைமைச் செய்தியாளரான அவர், கிளந்தான் அரண்மனை பொதுத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக மகாதிருக்கு வழங்கப்பட்டிருந்த Darjah Kerabat Al-Yunusi (டிகே) விருதைத் திரும்பப் பெற்றுக்கொண்டதைக் குறிப்பிட்டிருந்தார்.

“விருதைப் பறிக்கிறது என்றால் கிளந்தான் அரண்மனை மகாதிரை நிராகரிப்பதாகத்தான் பொருள்படும்”, என்றாரவர்.

இப்போதைய பேரரசர் கிளந்தான் சுல்தானும் ஆவார்.

மகாதிருக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையில் உறவுகள் நன்றாக இருந்ததில்லை என்பது அடிக்கடி சொல்லப்பட்டு வந்துள்ள ஒன்றுதான்.

1981க்கும் 2003-க்குமிடையில் முதல் தவணை பிரதமராக இருந்தபோது மகாதிர் ஆட்சியாளர்களுக்கிருந்த சில சட்டச் சலுகைகளை அகற்றினார். ஆட்சியாளர்களுக்கென தனி நீதிமன்றத்தையும் ஏற்படுத்தினார்.

மே 9 பொதுத் தேர்தல் நெருங்கி வந்த வேளையில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பூகிஸ் வம்சம் பற்றிக் கருத்துரைத்து சிலாங்கூர், ஜோகூர் சுல்தான்களின் கோபத்துக்கும் ஆளானார்.

முடிவில், சிலாங்கூர் அரண்மனை வழங்கிய இரண்டு விருதுகளை மகாதிர் தாமே திருப்பிக் கொடுத்து விட்டார்.