ஜொகூர் பாரு தீபாவளி சந்தையில் அமைக்கப்படவுள்ள தற்காலிகக் கடைகளுக்கு, கட்டுப்படுத்தப்பட்ட வாடகையை நிர்ணயித்து உள்ளதாக மாநில மனிதவள, ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை தலைவர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று காலை, இஸ்கண்டார் புத்ரியில், அவரது அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில், தீபாவளி சந்தை கடைகள் அதிக விலையில் வாடகைக்கு விடப்பட்டதாக சிலர் புகார் செய்துள்ளதாக இராமகிருஷ்ணன் கூறினார்.
“தீபாவளி சந்தையில், வழக்கமாக வியாபாரம் செய்யும் சிலர், நகர ஆளுநரைத் தொடர்புகொண்டு, கடைகள் அதிக விலைக்கு வாடகைக்கு விடப்படுவதாகவும், ஏறக்குறைய 1 மாதக் காலத்தில் தங்களால் இலாபம் காணமுடிவதில்லை என்றும் புகார் அளித்துள்ளனர்.
“இவ்வாண்டு புதிய அரசாங்கத்தின் முதல் தீபாவளி கொண்டாட்டம், ஆக அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்நாளைக் கொண்டாட, தீபாவளி சந்தையில் நாம் சில நிபந்தனைகளை விதித்துள்ளோம்.
“இம்முறை தீபாவளி சந்தை கடைகளுக்கான வாடகையை அவரவர் விருப்பத்திற்கு நிர்ணயிக்க முடியாது. நாம் அவற்றிற்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ளோம், 10 x 10 அளவிலான கடைகள் ரிம 3000-லிருந்து ரிம 3,500 வரையிலும் 10 x 20 அளவிலான கடைகளை ரிம 5,000-லிருந்து ரிம 5,500 வரையிலும் வாடகைக்கு விடலாம். இவ்வாடகை இன்னும் குறைக்கப்பட்டாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே,” என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு, கடைகளுக்காக 12 தெண்டர்கள், பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்ததாகவும் அவற்றுள் சிறு, நடுத்தர தொழில்களில் தொடர்புடைய 5 அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“அந்த 5 அமைப்புகளுக்கும் கடைகள் பகிர்ந்தளிக்கப்படும். அவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்குக் கடைகளை வாடகைக்கு விடலாம். சிறு, நடுத்தர தொழில் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.
அந்நிய நாட்டவருக்குக் கடைகள் இல்லை
அதுமட்டுமின்றி, இவ்வாண்டு அந்நிய நாட்டவர்க்குக் கடைகள் கிடையாது என்றும் பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
“அந்நிய நாட்டவர்களுக்குத் தீபாவளி சந்தைகளில் வியாபார வாய்ப்புகள் வழங்கப்படுவது பற்றியும் எங்களிடம் சிலர் குறைபட்டுக் கொண்டனர். இவ்வாண்டு, கண்டிப்பாக மலேசிய இந்திய சிறு வியாபாரிகளுக்கே இங்கு வாய்ப்பளிக்கப்படும்,” என்று அவர் உறுதியளித்தார்.
மேலும் சிலர், கடைகளை வாடகைக்கு எடுத்து, அதனை மறுவாடகைக்குப் பிறரிடம் கொடுப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“குறைந்த வாடகைக்குக் கடைகளை எடுத்து, அடுத்தவருக்கு அதிக வாடகையில் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், நாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
“சிறு வியாபாரிகளுக்கு, விழாக் காலங்களில் வழங்கப்படும் இதுபோன்ற வாய்ப்புகளை சில தரப்பினர் கொள்ளை இலாபம் சம்பாதிக்க அனுமதிக்க முடியாது,” என்றும் அவர் தெரிவித்தார்.
தீபாவளி சந்தை தற்காலிக கடைகளை நேரடியாக, வியாபாரிகளுக்கே வாடகைக்கு விட வேண்டும் எனும் கோரிக்கையும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
“ஆனால், இவ்வாண்டு ஜொகூர் பாரு லிட்டல் இந்தியா வியாபாரிகள் சங்கம், தீபாவளி சந்தை அலங்கரிப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. ஆக, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பளிக்கும் வகையிலேயே இம்முறையும் அமைப்புகளிடம் வழங்கி, சிறு வியாபாரிகளுக்குப் பகிர்ந்தளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
எதிர்வரும் காலங்களில், மாநிலச் சுற்றுலாத் துறையுடன் இணைந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் தீபாவளி சந்தையை மாற்றியமைக்கும் திட்டமும் இருப்பதாக அவர் சொன்னார்.
தீபாவளி சந்தையில், கடந்த ஆண்டுகளில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால், இம்முறை போலிசாரிடம் காவல் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
25 ஆண்டுகள் நிறைவடையும் ஜேபி தீபாவளி சந்தை
இதற்கிடையே, கடந்த 1993-ம் ஆண்டு முதல், ஜொகூர் பாருவில் தீபாவளி சந்தை ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஜொகூர் இந்தியர் வர்த்தக சங்கத்தின் (ஜீபா) தலைவர் பி சிவக்குமார் தெரிவித்தார்.
“1993-ல் ஜொகூர் இந்தியர் வர்த்தகர் சம்மேளனம் இந்தத் தீபாவளி சந்தையை ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து, 1994 முதல், சுமார் 24 ஆண்டுகளாக, பல போராட்டங்களுக்கிடையே, ஜீபா இதனை முன்னெடுத்து செய்துவருகிறது.
“இவ்வாண்டு 5 அமைப்புகள் தீபாவளி சந்தை அலங்கரிப்பில் பங்குகொண்டுள்ளன. அலங்கரிப்பின் மொத்த செலவையும் நிலா உணவகத்தின் உரிமையாளர் இராஜா ஏற்றுகொண்டுள்ளார்,” என சிவக்குமார் தெரிவித்தார்.
“எதிர்வரும் அக்டோபர் 16-ம் தேதி, ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி, தீபாவளி ஒளி ஊட்டைத் தொடக்கி வைப்பார். அதன்பிறகு, பிரிதொரு நாளில், மாநில மந்திரி பெசார் மற்றும் நகர ஆளுநருடன் இணைந்து, ‘2018-ம் ஆண்டு ஜேபி தீபாவளி சந்தை’யை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்,” என்றும் அவர் தெரிவித்தார்.
ஜொகூர் பாரு மட்டுமின்றி, இவ்வாண்டு தம்போய் இண்டா, உலு திராம் / பெர்மாஸ் ஜெயா, குளுவாங் மற்றும் ச்சாஆ-விலும் தீபாவளி சந்தைகள் ஏற்பாடாகி உள்ளதாக ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.